ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு


தினத்தந்தி 28 Dec 2024 6:59 PM IST (Updated: 28 Dec 2024 7:14 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் ஜனவரி 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியத்தை பறைச்சாற்றும் இந்த பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.

தொடக்கத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரை கிலோ பச்சரிசி, வெல்லம், 20 கிராம் பருப்பு, முந்திரி, திராட்சை ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. அதன்பின்னர் இந்த திட்டம் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. அந்த வகையில், வருகிற பொங்கல் பண்டிகைக்கு என்ன பரிசு தொகுப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்து வந்தது.

இந்த நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விபரங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

"2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூபாய் 249.76 கோடி செலவு ஏற்படும்.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story