நீரிழிவு நோயாளிகளை அச்சுறுத்தும் பக்கவாதம்


நீரிழிவு நோயாளிகளை அச்சுறுத்தும் பக்கவாதம்
x
தினத்தந்தி 15 Oct 2024 5:35 PM IST (Updated: 15 Oct 2024 5:43 PM IST)
t-max-icont-min-icon

நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இல்லாதபோது உடலில் உள்ள ரத்த நாளங்களில் அழற்சி ஏற்பட்டு, ரத்த நாளங்கள் பாதிப்படைகின்றன.

நீரிழிவு நோயாளிகளுக்கு மற்றவர்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பக்கவாதம் வரக்கூடிய வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட இரண்டு நிமிடத்திற்கு ஒருவர் பக்கவாத நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கபடுகின்றனர்.

நீரிழிவு நோயாளிகளுக்கு கீழ்க்கண்ட காரணங்களால் பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாவதாக கண்டறியப்பட்டுள்ளது.

1. நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இல்லாதபோது உடலில் உள்ள ரத்த நாளங்களில் அழற்சி (இன்பளமேஷன்) ஏற்பட்டு, ரத்த நாளங்கள் பாதிப்படைகின்றன. மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது.

2. பாதிப்படைந்த ரத்த நாளங்களில், தமனிக்குழ்மைத்தடிப்பு (அதிரோஸ்கிலோரிடக்பிளேக்) ஏற்பட்டு ரத்த நாளங்களில் அடைப்பு உருவாகிறது. இது மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவை குறைத்து பக்கவாதம் ஏற்படுகின்றது.

3. பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இருதய நோய், அதிக கொலஸ்டரால், சிறுநீரக பாதிப்பு, ரத்தகொதிப்பு, உடல்பருமன் போன்றவையும் இருப்பதால் பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாகிறது.

பக்கவாதம் வராமல் தடுக்க நீரிழிவு நோயாளிகள் கீழ்கண்டவற்றை பின்பற்ற வேண்டும்:

1. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்தல்.

2. ரத்தத்தில் கொலஸ்டரால் மற்றும் ரத்த கொதிப்பை கட்டுக்குள் வைத்தல்.

3. புகைபிடித்தல் மற்றும் மதுப் பழக்கத்தை கைவிடுதல்.

4. உடல் எடையை குறைத்தல்.

5. தினமும் உடற்பயிற்சி செய்தல்.

6. நார்ச்சத்து நிறைந்த உணவுகள், கீரைகள், காய்கறிகள், பழங்கள், புரதம் நிறைந்த பால், மீன் அல்லது கோழி இறைச்சி, முட்டையின் வெள்ளைக்கரு போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல்.


Next Story