காபி, தேநீருக்கு மாற்றாக இயற்கை பானம்


காபி, தேநீருக்கு மாற்றாக இயற்கை பானம்
x
தினத்தந்தி 16 Nov 2024 6:00 AM IST (Updated: 16 Nov 2024 6:00 AM IST)
t-max-icont-min-icon

நம் முன்னோர்கள் தேயிலைக்கு பதிலாக கஞ்சாங்கோரை என்ற துளசி குடும்ப தாவரத்தின் இலைகளை பயன்படுத்தி வந்துள்ளனர்.

காபி, தேநீருக்கு முன்பாகவே தமிழ் கலாச்சாரத்தில் ஏராளமான இயற்கை பானங்கள் அருந்தி வந்தனர். தேநீர் இந்தியாவில் அறிமுகமானது 17- ஆம் நூற்றாண்டுக்கு பின்பு தான், "கெமாலியா சைனன்சிஸ்" என்ற தாவரவியல் பேர் கொண்ட தேயிலையின் பூர்வீகம் சீனா மற்றும் பர்மா. கிபி 1606 ஆம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனியால் தேயிலை இங்கிலாந்துக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கிபி 1800-க்கு பின்னர் ஆங்கிலேயர்களால் அசாம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தேயிலை பயிரிடப்பட்டு மக்களின் பழக்கத்திற்கு வந்துள்ளது.

"காபியா அராபிகா"-என்னும் தாவரவியல் பெயர் கொண்ட காபி செடி எத்தியோப்பியா, அரேபியா தேசங்களுக்கு பூர்வீகமான தாவரம். 1670 ஆம் ஆண்டு மெக்காவிற்கு புனித பயணம் சென்ற கோபி துறவி பாபா பூதன் மூலமாக இந்தியாவில் அறிமுகம் ஆகி மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

நம் முன்னோர்கள் தேயிலை, காபிக்கு பதிலாக காலை, மாலை நேரங்களில் மல்லி, சுக்கு, மிளகு, இவற்றைப் பொடித்து அத்துடன் கருப்பட்டி, பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து காய்ச்சி குடித்து வந்துள்ளனர். இதன் மூலம் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியையும், ஜீரண சக்தியையும் பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர்.

தேயிலைக்கு பதிலாக கஞ்சாங்கோரை என்ற துளசி குடும்ப தாவரத்தின் இலைகளையும் பயன்படுத்தி வந்துள்ளனர். இது ஒரு சிறந்த நுரையீரல் தேற்றி. இதன் மூலம் நுரையீரலில் ஏற்படும் நோய்கள் வராமல் பாதுகாக்க முடியும். சளி, இருமல் ஆகியவற்றுக்கு இது ஒரு சிறந்த மருந்தாக இன்றளவும் பயன்படுகிறது.

காபிக்கு பதிலாக நத்தைச்சூரி என்ற தாவரத்தின் விதையை வறுத்து பொடித்து பயன்படுத்தி உள்ளனர். இதை வறுக்கும் போது காப்பித்தூளின் மணம் வரும். இதனால் உடல் பருமன், தொப்பை, ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு குறையும், உடல் ஆரோக்கியமாக திகழும்.


Next Story