எலும்பு வளர்ச்சிக்கும், உறுதிக்கும் ஏற்ற உணவுகள்
எலும்பு உறுதிக்கு கொள்ளு ரசம் மிகவும் நன்று. எலும்பை உறுதிப்படுத்தி, தேவையற்ற கொழுப்பு, சதையை குறைக்கும்.
கால்சியம் மிகுந்த உணவுப் பொருட்கள்
1. உணவில் பால், தயிர், பாலாடைக்கட்டி, முட்டை, மீன், கோழி, காடை, ஆட்டிறைச்சி வகைகள். கீரைகளில், எலும்பொட்டிக் கீரை, வெந்தயக்கீரை, முருங்கை கீரை, பாலக் கீரை, பசலைக்கீரை, கொத்தமல்லி கீரை. காய்கறி வகைகளில், சோயாபீன்ஸ், பட்டர் பீன்ஸ், பீன்ஸ்,பிரண்டை தண்டு, முட்டைக்கோஸ், வெண்பூசணி, அவரைக் காய், முருங்கைக்காய், காலிபிளவர், பிரக்கோலி, முள்ளங்கி, பீட்ரூட், கேரட், பழங்களில் பேரீச்சை, அத்திப்பழம், மாதுளம் பழம், பன்னீர் திராட்சை, மற்றும் கருப்பு உளுந்து, பாசிப்பயறு, துவரம் பருப்பு, கம்பு, வரகு, சோளம், சாமை, குதிரைவாலி, எள், கொள்ளு, பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு போன்ற உணவுகளில் கால்சியம் மிகுந்து காணப்படுகிறது.
2. தினமும் அதிகாலை வெயில் அல்லது மாலை இளவெயிலில் சிறிது நேரம் நடக்கலாம். இதனால் தோல் மூலம் உடம்புக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்கிறது, கால்சியம் உடலில் சேர்வதற்கு வைட்டமின் டி இன்றியமையாதது. ஒரு கிராம் குங்குமப் பூவை, 100 மிலி தேங்காய் எண்ணெயில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, அதை இரண்டு துளி உள்ளுக்கு கொடுத்தும், உடம்பில் தேய்த்தும் மாலை இளவெயிலில் நடைபயிற்சி செய்து வந்தால் "விட்டமின் டி" உடலில் எளிதில் உட்கிரகிக்கப்படும்
3. லாக்டோஸ் இன்டாலரன்ஸ் என்னும் பால் ஒவ்வாமை உடையவர்கள் பாலுக்கு பதிலாக சோயா பால், தேங்காய் பால், பாதாம் பால் இவைகளில் ஒன்றை சாப்பிட்டு வந்தால் தினசரி தேவையான கால்சியம் நம் உடலுக்கு கிடைத்துவிடும்.
4. கொள்ளில் சோயாவுக்கு இணையாக கால்சியம் உள்ளது. எலும்பு உறுதிக்கு கொள்ளு ரசம் மிகவும் நன்று. எலும்பை உறுதிப்படுத்தி, தேவையற்ற கொழுப்பு, சதையை குறைக்கும்.
கொள்ளு - 10 கிராம், மிளகு, சீரகம், கொத்தமல்லி, பூண்டு, புளி அல்லது தக்காளி தேவையான அளவு எடுத்து ரசமாக வைத்துக் குடிக்க வேண்டும்.
5. எலும்பொட்டிக் கீரை என்றழைக்கப்படும் ஒரு கொடி வகை தாவரம்: இந்தச் செடியின் இலையை பாலுடன் நன்கு அரைத்து காலை, மாலை இருவேளை ஒரு நெல்லிக்காய் அளவு உணவுக்கு முன்போ அல்லது பின்போ சாப்பிட்டு வர எலும்புகள் உறுதியடையும்.
6. பிரண்டைத் தண்டில் ஏராளமான கால்சியம், பாஸ்பரஸ் படிம வடிவில் உள்ளது. பிரண்டையை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, புளி சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வர வேண்டும். இதை புளி சேர்க்காமல் உணவில் சேர்த்துக் கொண்டால் தொண்டைக் காறலுடன், எரிச்சல் உண்டாகும்.
எலும்பு முறிவை சீராக்கும் தைலம்:
தேவையான பொருட்கள்: பிரண்டைச் சாறு - 100 மி. லி, எலும்பொட்டிக் கீரைச் சாறு - 100 மி. லி, மஞ்சிட்டி - 20கிராம், சுக்கு - 20கிராம், நல்லெண்ணெய் - 250மிலி. மேற்கண்ட பொருட்களை எடுத்து நல்லெண்ணெயில் கலந்து காய்த்து எண்ணெய் பதத்தில் எடுத்து கொள்ளவும்.இதை தேய்த்து வந்தால் எலும்புகள் உறுதியாகும், வலிகள் நீங்கும்.
7. முடவாட்டுக்கால் கிழங்கு சூப்: முடவாட்டுக்கால் என்பது மலைப் பகுதிகளில் வளருகின்ற பெரணி வகைத் தாவரத்தின் கிழங்கு ஆகும்,இதை சிறு துண்டுகளாக நறுக்கி அல்லது அரைத்து இதனுடன் தேவையான அளவு , உப்பு,சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், கறி மசாலா சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் எலும்பு அடர்த்தி அதிகரித்து எலும்புகள் உறுதியாகும், உடல் சோர்வு, களைப்பு,வலி நீங்கும்.
எலும்புகளை பலப்படுத்தும் சித்த மருந்துகள்:
1. அமுக்கரா சூரணம் -1 கிராம், முத்துச் சிப்பி பற்பம் -200 மிகி, குங்கிலிய பற்பம் -200 மிகி,சங்கு பற்பம் -200 மிகி அல்லது பலகரை பற்பம்-200 மிகி வீதம் இருவேளை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் உறுதியாகும்.
2. எலும்புகள் சார்ந்த வலிகள் நீங்குவதற்கு விடமுட்டி தைலத்தை தேய்க்கலாம்.