உலக கோப்பை கால்பந்து மைதானங்கள் ஒரு பார்வை
உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரின் முக்கிய நகரங்களில் உள்ள 8 ஸ்டேடியங்களில் நடக்கிறது.
தோகா,
உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரின் தோகா, அல்கோர், லுசைல், அல்ரையான், அல்வக்ரா ஆகிய நகரங்களில் உள்ள 8 ஸ்டேடியங்களில் நடக்கிறது. இவை அனைத்தும் தலைநகர் தோகாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திற்குள் அமைந்துள்ளது. இவற்றில் 7 மைதானங்கள் புதியதாக கட்டப்பட்டன. ஒன்று மட்டும் புதுபிக்கப்பட்டது. பிரமாண்டமாக காட்சி அளிக்கும் இந்த ஸ்டேடியங்களுக்கு மட்டும் கத்தார் அரசு ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது.
உலக கோப்பை மைதானங்களின் சிறப்பு அம்சங்கள் வருமாறு:-
லுசைல் ஐ கானிக் ஸ்டேடியம் (இருக்கை வசதி: 80 ஆயிரம்): கத்தாரில் உள்ள மிகப்பெரிய மைதானமான இதில் 80 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை கண்டு களிக்கலாம். இங்கு மொத்தம் 10 ஆட்டங்கள் நடக்க உள்ளன. இவற்றில் டிசம்பர் 18-ந்தேதி அரங்கேறும் இறுதிப்போட்டியும் அடங்கும். பிரேசில், அர்ஜென்டினா, போர்ச்சுகல் அணிகளின் லீக் சுற்று ஆட்டங்களும் நடக்கின்றன.
அல் பேத் மைதானம் (இருக்கை: 60 ஆயிரம்): கத்தார்- ஈகுவடார் இடையிலான தொடக்க மோதல் உள்பட மொத்தம் 9 ஆட்டங்கள் நடக்கின்றன. கத்தார் மற்றும் வளைகுடா மண்டலத்தில் நாடோடி மக்கள் பயன்படுத்திய கூடாரமான பேத் அல் ஷார் போன்று இந்த மைதானம் கட்டப்பட்டு உள்ளது. போட்டிகள் முடிந்ததும் மைதானத்தின் மேல் அடுக்கு அகற்றப்படும்.
ஸ்டேடியம் 974 (இருக்கை: 40 ஆயிரம்): தோகா கடற்பகுதியில் அமைந்துள்ள இந்த மைதானம் புதுமையானது. கப்பலில் பயன்படுத்தப்படும் இரும்பு சரக்கு பெட்டகங்களை (கண்டெய்னர்) கொண்டு கட்டப்பட்டு உள்ளது. மொத்தம் 974 சரக்கு பெட்டகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்டேடியம் உலக கோப்பை பந்தயம் முடிந்ததும் முற்றிலும் அகற்றப்படும். உலக கோப்பை வரலாற்றில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட முதல் மைதானம் இது தான். இங்கு 7 ஆட்டங்கள் நடைபெறுகிறது.
அல் துமாமா ஸ்டேடியம் (இருக்கை: 40 ஆயிரம்): இந்த மைதானம் 'காபியா' வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இது மத்திய கிழக்கு பகுதியை சேர்ந்த ஆண்கள் அணியும் தொப்பியை போன்று இருக்கும். உலக கோப்பை முடிந்ததும் இருக்கை எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட உள்ளது. கழற்றப்படும் இருக்கைகளை மற்ற நாடுகளுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 8 ஆட்டங்கள் நடக்கின்றன.
கலீபா சர்வதேச ஸ்டேடியம் (இருக்கை: 45 ஆயிரத்து 416): இந்த மைதானம் 1976-ம் ஆண்டு கட்டப்பட்டது. கத்தாருக்கு உலக கோப்பை போட்டியை நடத்தும் உரிமம் கிடைப்பதற்கு முன்பு அங்கு இருந்த ஒரே மைதானம் இது தான். உலக கோப்பை போட்டிக்காக மைதானம் முற்றிலும் புனரமைக்கப்பட்டுள்ளது. இங்கு 8 ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் 3-வது இடத்திற்கான ஆட்டமும் அடங்கும்.
எஜூகேசன் சிட்டி ஸ்டேடியம் (இருக்கை: 45 ஆயிரத்து 350): பாலைவனத்தின் வைரம் என்று அழைக்கப்படும் இந்த ஸ்டேடியத்தில் 8 ஆட்டங்கள் நடக்கின்றன.
அகமது பின் அலி ஸ்டேடியம் (இருக்கை: 44 ஆயிரத்து 740): இந்த மைதானத்தில் 7 ஆட்டங்கள் நடக்கின்றன. போட்டி முடிந்ததும் இருக்கை எண்ணிக்கை பாதியாக குறைக்கப்படும்.
அல் ஜனாப் ஸ்டேடியம் (இருக்கை: 40 ஆயிரம்): பாரசீக வளைகுடாவில் ஆழ்கடலில் முத்து எடுக்க பயன்படுத்தப்படும் பாரம்பரிய படகு போன்று இதன் மேற்பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு 6 லீக் மற்றும் ஒரு நாக்-அவுட் சுற்று ஆட்டம் நடக்கிறது.