உலகக் கோப்பை கால்பந்து - நடுவருடன் வாக்குவாதம் செய்த தென்கொரியா பயிற்சியாளருக்கு சிவப்பு அட்டை
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தென்கொரியாவை வீழ்த்தி கானா அணி வெற்றி பெற்றது.
தோகா,
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்றிரவு 'எச்' பிரிவில் நடந்த ஆட்டத்தில் தென்கொரியா-கானா அணிகள் சந்தித்தன. முதல் பாதியில் கானா வீரர்கள் முகமது சலிசு, முகமது குடுஸ் ஆகியோர் கோல் அடித்து அதிர்ச்சி அளித்தனர். பிற்பாதியில் சரிவில் இருந்து மீண்ட தென்கொரியா அணியில் சோ கியூ சங் 58 மற்றும் 61 நிமிடங்களில் கோல் போட்டு சமனுக்கு கொண்டு வந்தார். ஆனால் தென்கொரியாவின் உற்சாகம் நீடிக்கவில்லை.
68-வது நிமிடத்தில் கானாவின் முகமது குடுஸ் மறுபடியும் கோல் போட்டு அசத்தினார். கடைசி கட்டத்தில் தென்கொரியா அணியினர் ஒட்டுமொத்தமாக எதிரணியின் கோல் கம்பத்தை முற்றுகையிட்டு முயற்சித்தும் கோல் வாய்ப்பு கனியவில்லை. முடிவில் கானா 3-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றது. ஆப்பிரிக்க நாடான கானா உலகக் கோப்பை கால்பந்தில் ஒரு ஆட்டத்தில் 3 கோல் அடிப்பது இதுவே முதல் முறையாகும்.
3 புள்ளிகளுடன் உள்ள கானா அணி கடைசி லீக்கில் உருகுவேயை வீழ்த்தினால் அடுத்த சுற்றை அடையலாம். ஒரு புள்ளியுடன் உள்ள தென்கொரியா தனது கடைசி லீக்கில் போர்ச்சுகலை அதிக கோல் வித்தியாசத்தில் சாய்த்தால் மட்டுமே அடுத்த சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும்.
இதற்கிடையே, இந்த ஆட்டத்தில் காயம் உள்ளிட்ட விரயத்துக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் சற்று முன்கூட்டியே நடுவர் அந்தோணி டெய்லர் விசில் ஊதி ஆட்டத்தை முடித்து விட்டதாக கூறி தென்கொரியாவின் தலைமை பயிற்சியாளர் பாலோ பென்டோ (போர்ச்சுகலை சேர்ந்தவர்) நடுவருடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவருக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டி எச்சரித்தார். இதன் மூலம் அடுத்த ஆட்டத்தில் பயிற்சியாளர் பாலோ பென்டோ வீரர்களின் பகுதியில் அமர முடியாது.