உலகக் கோப்பை கால்பந்து: போலந்தை சமாளிக்குமா அர்ஜென்டினா? - இன்று மோதல்


உலகக் கோப்பை கால்பந்து: போலந்தை சமாளிக்குமா அர்ஜென்டினா? - இன்று மோதல்
x

உலகக் கோப்பை கால்பந்தில் இன்று ‘டி’ மற்றும் ‘சி’ பிரிவில் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடக்கின்றன

மெஸ்சி

உலகக் கோப்பை கால்பந்தில் இன்று 'டி' மற்றும் 'சி' பிரிவில் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. 'சி' பிரிவில் தொடக்க ஆட்டத்தில் சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்த லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி அடுத்த ஆட்டத்தில் மெக்சிகோவை பதம் பார்த்து எழுச்சி பெற்றது.

இன்றைய ஆட்டத்தில் போலந்தை வீழ்த்தினால் 6 புள்ளிகளுடன் சிக்கலின்றி அடுத்த சுற்றை எட்டலாம். தோற்றால் வெளியேற வேண்டியதுதான். ஒரு வேளை 'டிரா' கண்டால் சவுதி அரேபியா- மெக்சிகோ ஆட்டத்தின் முடிவை பொறுத்து அர்ஜென்டினாவின் தலைவிதி தீர்மானிக்கப்படும். போலந்துக்கு எதிராக இதுவரை 11 சர்வதேச போட்டிகளில் மோதியுள்ள அர்ஜென்டினா அணி அதில் 6-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும், 2-ல் டிராவும் சந்தித்துள்ளது.

'டி' பிரிவில் ஏற்கனவே நடப்பு சாம்பியன் பிரான்ஸ் (6 புள்ளி) அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. மற்றொரு இடத்துக்கு ஆஸ்திரேலியா, டென்மார்க் கோதாவில் நிற்கின்றன. 3 புள்ளியுடன் உள்ள ஆஸ்திரேலிய அணி அடுத்த சுற்றை அடைவதற்கு டென்மார்க்கை வீழ்த்த வேண்டும். குறைந்தது 'டிரா'வாவது காண வேண்டும். அதே சமயம் டென்மார்க் அணிக்கு, ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் மட்டுமே அதிர்ஷ்டம் அடிக்கும். ஒரு புள்ளியுடன் உள்ள துனிசியாவை பொறுத்தவரை பிரான்சை மிகப்பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி, டென்மார்க்- ஆஸ்திரேலியாவின் முடிவும் சாதகமாக அமைந்தால் அடுத்த சுற்று கதவு திறக்கும்.

ஒவ்வொரு பிரிவிலும் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. ஏனெனில் ஒன்றன்பின் ஒன்றாக நடத்தினால் முதல் ஆட்டத்தின் முடிவை வைத்து அடுத்து விளையாடும் அந்த பிரிவு அணிகள் கோல் வித்தியாசம் மற்று புள்ளிகளை அறிந்து அதற்கு ஏற்ப விளையாட முடியும். சூழ்நிலைக்கு தகுந்தபடி திட்டமிட்டு ஆடும் போது சில சமயங்களில் உண்மையான சுவாரஸ்யமும் குறைந்து விடும். இவற்றை தவிர்க்கவே ஒவ்வொரு பிரிவிலும் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது.


Next Story