உலகக் கோப்பை கால்பந்து: 2-வது கால்இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து-அர்ஜென்டினா இன்று மோதல்
உலகக் கோப்பை கால்பந்தில் இன்றிரவு நடக்கும் 2-வது கால்இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து- அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.
தோகா,
உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில், லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் 2-வது கால்இறுதியில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா அணி, நெதர்லாந்தை சந்திக்கிறது.
லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா தொடக்க லீக்கில் 1-2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவியது. அதன் பிறகு மெக்சிகோ, போலந்து அணிகளை வீழ்த்தி எழுச்சி பெற்ற அர்ஜென்டினா 2-வது சுற்றில் 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை விரட்டியடித்து கால்இறுதிக்கு வந்திருக்கிறது.
தனது கடைசி உலக கோப்பையில் ஆடும் 35 வயதான லயோனல் மெஸ்சியின் கனவு நனவாக இன்னும் 3 தடைகளை வெற்றிகரமாக கடந்தாக வேண்டும். 3 கோல்கள் அடித்துள்ள மெஸ்சியுடன் ஜூலியன் அல்வாரஸ், என்ஜோ பெர்னாண்டஸ், அலெக்சிஸ் மாக் அலிஸ்டர் போன்ற இளம் படையினரும் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆடுகிறார்கள். ஆனால் தொடையில் காயத்தால் அவதிப்படும் மூத்த வீரர் ஏஞ்சல் டி மரியா இந்த ஆட்டத்தில் களம் காணுவது சந்தேகம் தான்.
நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத அணிகளில் நெதர்லாந்தும் ஒன்று. லீக் சுற்றில் செனகல், கத்தார் அணிகளை போட்டுத் தாக்கிய அந்த அணி ஈகுவடாருடன் 1-1 என்ற கணக்கில் டிரா கண்டது. 2-வது சுற்றில் அமெரிக்காவை 3-1 என்ற கோல் கணக்கில் ஊதித்தள்ளியது.
கால்பந்து உலகில் சிறந்த அணிகளில் ஒன்றாக வர்ணிக்கப்படும் நெதர்லாந்து இதுவரை உலக கோப்பையை வென்றதில்லை. 3 முறை இறுதி சுற்றில் தோல்வி அடைந்திருக்கிறது. அந்த மோசமான அனுபவத்துக்கு முடிவு கட்டுவதற்கான முதற்படிக்கட்டாக இந்த ஆட்டம் இருக்கும். மெம்பிஸ் டெபே, கோடி காக்போ (3 கோல்), விர்ஜில் வான் டிக், பிரெங்கி டி ஜோங், டென்ஸில் டம்ப்ரைஸ் உள்ளிட்டோர் நெதர்லாந்தின் முன்னணி வீரர்களாக வலம் வருகிறார்கள்.
களத்தில் மின்னல் வேகத்தில் விளையாடுவதில் கைதேர்ந்த நெதர்லாந்து அணியின் சவாலை மெஸ்சி சகாக்கள் எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்பதே ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும். இதில் யாருடையை கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம் என்றாலும் முதலில் கோல் போடும் அணிக்கு வாய்ப்பு சற்று அதிகமாகும்.
இவ்விரு அணிகளும் இதுவரை 9 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 4-ல் நெதர்லாந்தும், ஒன்றில் அர்ஜென்டினாவும் வெற்றி பெற்றுள்ளன. 4 ஆட்டங்கள் டிராவில் முடிந்தது. கடைசியாக 2014-ம் ஆண்டு உலகக் கோப்பையின் அரைஇறுதியில் சந்தித்த போது பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.