உலகக் கோப்பை கால்பந்து: பிரான்சின் அதிரடியை சமாளிக்குமா மொராக்கோ? 2-வது அரைஇறுதியில் இன்று மோதல்


உலகக் கோப்பை கால்பந்து: பிரான்சின் அதிரடியை சமாளிக்குமா மொராக்கோ? 2-வது அரைஇறுதியில் இன்று மோதல்
x

கோப்புப்படம் 

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்சின் அதிரடி தாக்குதலை சமாளிக்கும் உத்வேகத்துடன் அரைஇறுதியில் மொராக்கோ இன்று களம் இறங்குகிறது.

தோகா,

22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நடந்து வருகிறது. இதில் இன்றிரவு (புதன்கிழமை) அல்பேத் ஸ்டேடியத்தில் நடக்கும் 2-வது அரைஇறுதியில் பிரான்ஸ் அணி, மொராக்கோவை எதிர்கொள்கிறது. நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் வலம் வரும் தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் பிரான்ஸ் அணி லீக் சுற்றில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் முதலிடம் பிடித்தது. 2-வது ரவுண்டில் 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தையும், கால்இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும் பதம் பார்த்து அரைஇறுதியை எட்டியிருக்கிறது.

பிரேசில் வெளியேறிய நிலையில் இப்போது அனைவரது கவனமும் பிரான்ஸ் பக்கம் திரும்பியிருக்கிறது. அதுவே அவர்களுக்கு கூடுதல் நெருக்கடியாக இருக்கும். 1962-ம் ஆண்டுக்கு பிறகு கோப்பையை தக்க வைக்கும் முதல் அணி என்ற மகத்தான சாதனையை நோக்கி பயணிக்கும் பிரான்ஸ் அணிக்கு கிலியன் எம்பாப்பே (5 கோல்), ஒலிவியர் ஜிரூட் (4 கோல்), கோல் வாய்ப்புகளை உருவாக்கும் கிரீஸ்மான் ஆகியோர் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்கள். களத்தில் மின்னல் வேகத்தில் ஓடும் இவர்கள் சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் பந்தை வலைக்குள் தள்ளிவிடுவதில் கில்லாடிகள். கேப்டனும், கோல் கீப்பருமான ஹூகோ லோரிசும் அணியின் கட்டமைப்புக்கு பக்கபலமாக இருக்கிறார்.

வேகம் தேவை

பிரான்ஸ் வீரர் ஜூலஸ் கோன்டோ நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'இது கடினமும், பரபரப்பும் நிறைந்த ஆட்டமாக இருக்கும். ஒரு அணியாக அற்புதமான பயணத்தை மேற்கொண்டு வரும் அவர்கள் சில பெரிய அணிகளை வெளியேற்றி இருக்கிறார்கள். அதனால் மொராக்கோவை நாங்கள் ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்வோம். பந்து வசம் இருக்கிறதோ இல்லையோ நாங்கள் மிக தீவிரமாகவும், வேகமாகவும் செயல்பட வேண்டியது அவசியமாகும். அப்போது தான் அவர்களின் வலுவான தற்காப்பு வளையத்தை தகர்த்து முன்னேற முடியும்' என்றார்.

இந்த உலகக் கோப்பையில் கணிக்க முடியாத ஒரு அணியாக அரைஇறுதி வரை நுழைந்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறது, மொராக்கோ. அரைஇறுதியை எட்டிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற சரித்திர சிறப்பும் உண்டு.

கோல் வழங்காத மொராக்கோ

லீக் சுற்றில் 2 வெற்றி, ஒரு டிராவுடன் முதலிடம் பெற்ற மொராக்கோ 2-வது சுற்றில் கோல் ஏதும் போடாத நிலையில் பெனால்டி ஷூட்-அவுட்டில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினை சாய்த்தது. மொராக்கோ கோல் கீப்பர் யாசின் போனோ ஸ்பெயினின் ஷாட்டுகளை எல்லாம் முறியடித்து ஹீரோவாக பிரகாசித்தார். தொடர்ந்து கால்இறுதியில் ஒரே கோலில் போர்ச்சுகலின் கனவை சிதைத்தது.

நடப்பு தொடரில் 5 கோல்கள் அடித்துள்ள மொராக்கோ ஒரு கோல் மட்டுமே வாங்கியுள்ளது. அதுவும் சுயகோல் தான். இதன் மூலம் அவர்களின் தற்காப்பு ஆட்டம் எந்த அளவுக்கு பலமிக்கதாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். அந்த அணியில் யூசப் இன் நெசைரி (2 கோல்), அச்ராப் ஹகிமி, ஹகிம் ஜியேச் ஆகியோர் சிறப்பாக ஆடுகிறார்கள். ஏராளமான மொராக்கோ ரசிகர்கள் குவிந்திருப்பதால் அவர்களின் ஆர்ப்பரிப்பு அந்த அணிக்கு உந்துசக்தியாக இருக்கும்.க்

இவ்விரு அணிகளும் இதுவரை 5 நட்புறவு ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 3-ல் பிரான்சும், ஒன்றில் மொராக்கோவும் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. உலகக் கோப்பையில் இவர்கள் மல்லுகட்டுவது இதுவே முதல் முறையாகும்.

நள்ளிரவு 12.30 மணிக்கு...

இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. உலகத் தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள மொராக்கோ, தாக்குதல் பாணியை கையாளும் பிரான்சுக்கும் அதிர்ச்சி அளிக்குமா அல்லது மொராக்கோவின் தடுப்பு அரணை உடைத்து பிரான்ஸ் 4-வது முறையாக இறுதிசுற்றுக்குள் அடியெடுத்து வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Next Story