கத்தார் உலகக்கோப்பையில் முதல் ரெட் கார்டு பெற்று சோகத்துடன் வெளியேறிய வேல்ஸ் கோல்கீப்பர்..!
வேல்ஸ் அணியின் கோல்கீப்பர் ஹென்னிஸி, ஆட்டத்தின் 86-வது நிமிடத்தில் நடுவரால் ரெட் கார்டு எச்சரிக்கை செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
தோகா,
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ந் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று குரூப் பி-ல் நடைபெற்ற போட்டியில் வேல்ஸ்-ஈரான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஈரான் 2-0 என்ற கோல்கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்த போட்டியில் வேல்ஸ் அணியின் கோல்கீப்பர் ஹென்னிஸி, ஆட்டத்தின் 86-வது நிமிடத்தில் நடுவரால் ரெட் கார்டு எச்சரிக்கை செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்த உலகக் கோப்பையில் முதல் ரெட் கார்டு இதுவாகும்.
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் இது 174-வது ரெட் கார்டு ஆகும். உலகக் கோப்பையில் ரெட் கார்டு பெற்ற மூன்றாவது கோல் கீப்பர் ஹென்னிஸி ஆவார். இதற்கு முன்பு 2010-ல் தென் ஆப்பிரிக்காவின் இடுமெலங் குனே, 1994ல் இத்தாலி கோல் கீப்பர் ஜியன்லுகா பக்லியுகா ஆகியோர் ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டத்தின் 85-வது நிமிடத்தில் வேல்ஸ் அணியின் தடுப்பாட்டத்தை தகர்த்த ஈரான் வீரர் மெஹ்தி தாரெமி, பந்தை துரத்திக்கொண்டு கோல் கம்பத்தை நெருங்கினார். இதையடுத்து ஹென்னிஸி, அவரது எல்லையை விட்டு வெளியே பாய்ந்து வந்து, தாரெமிக்கு முன்னதாக பந்தை தடுக்க முயன்றார். அதற்குள் தாரெமி அடித்த பந்து ஹென்னஸியை தாண்டி சென்றுவிட்டது.
அதேசமயம் வந்த வேகத்தில் ஹென்னிஸி, தாரெமியை உதைக்க, இருவரும் கீழே விழுந்துவிட்டனர். விதிமீறலை கவனித்த போட்டி நடுவர் மரியோ எஸ்கோபார், ஹென்னிஸிக்கு முதலில் மஞ்சள் அட்டை காட்டினார். ஆனால் வீடியோ மானிட்டரைப் பார்த்த அவர், தனது முடிவை மாற்றி, பின்னர் ரெட் கார்டு காண்பித்தார். இதையடுத்து ஹென்னிஸி சோகத்துடன் மைதானத்தைவிட்டு வெளியேறினார்.