32 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் இன்று தொடக்கம்
32 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் கத்தார்-ஈகுவடார் அணிகள் மோதுகின்றன.
தோகா,
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் இந்த போட்டி நடைபெறவில்லை. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. கால்பந்து ரசிகர்களை கட்டிபோடப்போகும் இந்த திருவிழா டிசம்பர் 18-ந் தேதி வரை 29 நாட்கள் அரங்கேறுகிறது. அங்குள்ள 5 நகரங்களில் பிரமாண்டமாக கட்டப்பட்டு இருக்கும் 8 ஸ்டேடியங்களில் போட்டி நடக்கிறது. அரபு நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். அத்துடன் ஆசிய கண்டத்தில் இந்த போட்டி நடப்பது 2-வது முறையாகும்.
இந்த போட்டியில் 5 முறை சாம்பியனான பிரேசில், 4 முறை சாம்பியனான ஜெர்மனி, நடப்பு சாம்பியன் பிரான்ஸ், அர்ஜென்டினா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில் கத்தார் மட்டும் நேரடியாக தகுதி பெற்றது. மற்ற அணிகள் அனைத்தும் தகுதி சுற்று மூலம் நுழைந்தன. இதுவரை எந்த உலக கோப்பை போட்டிக்கும் தகுதி பெறாத இந்திய அணி இந்த முறையும் ஏமாற்றமே அளித்தது. ஆசிய மண்டலத்துக்கான தகுதி சுற்று போட்டியில் 2-வது சுற்றுடன் நடையை கட்டியது.
இதில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறும்.
எல்லா கண்டத்தை சேர்ந்த அணிகளும் உலக கோப்பை போட்டியில் பங்கேற்றாலும், கோப்பையை வெல்வதில் ஐரோப்பியா மற்றும் தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதுவரை ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த அணிகள் 12 முறையும், தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகள் 9 முறையும் கோப்பையை வென்று இருக்கின்றன. ஆசியா, ஆப்பிரிக்க கண்டத்துக்குரிய அணிகள் இறுதி சுற்றில் கூட அடியெடுத்து வைத்தது கிடையாது.
உலக கோப்பையை கைப்பற்றுவதில் இந்த முறையும் ஐரோப்பியா, தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகள் இடையே தான் கடும் போட்டி இருக்கும். 2002-ம் ஆண்டுக்கு பிறகு தென்அமெரிக்க அணிகள் உலக கோப்பையை வென்றதில்லை. ஏற்கனவே கோப்பையை வென்று இருக்கும் அணிகளே மீண்டும் உலக கோப்பையை வெல்லுமா அல்லது புதிய அணி கோப்பையை கையில் ஏந்துமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
5 முறை சாம்பியனான பிரேசில் அணி மீண்டும் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ள அணியாக கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய அணிகளும் வலுவாக இருப்பதால் இந்த போட்டி தொடர் ரசிகர்களுக்கு பலத்த விருந்து படைப்பதாக இருக்கும்.
உலகின் தலைசிறந்த வீரர்களாக விளங்கும் லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), கரீம் பென்ஜிமா, கிலியன் எம்பாப்வே (இருவரும் பிரான்ஸ்), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), நெய்மார், வினிசியஸ் (இருவரும் பிரேசில்), ஹாரி கேன் (இங்கிலாந்து), லூகா மோட்ரிச் (குரோஷியா), ராபர்ட் லெவன்டோஸ்கி (போலந்து), தாமஸ் முல்லர் (ஜெர்மனி), ரோம்லு லுகாகு, கெவின் டி புருனே (இருவரும் பெல்ஜியம்), சுவாரஸ் (உருகுவே) ஆகியோர் இந்த போட்டி தொடரில் முத்திரை பதிக்கும் வகையில் ஆடுவார்கள் எனலாம்.
தொடக்க நாளான இன்று ஒரே ஒரு ஆட்டம் நடக்கிறது. இதில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள போட்டியை நடத்தும் கத்தார்-ஈகுவடார் அணிகள் மோதுகின்றன. அல்கோர் நகரில் உள்ள 60 அயிரம் இருக்கைகள் வசதி கொண்ட அல் பேத் ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடக்கிறது.
தரவரிசையில் 50-வது இடத்தில் இருக்கும் கத்தார் அணி முதல்முறையாக உலக கோப்பையில் கால் பதிக்கிறது. தரவரிசையில் 44-வது இடத்தில் உள்ள தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த ஈகுவடார் அணி 4-வது முறையாக உலக கோப்பையில் ஆடுகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு சேர் சந்தித்துள்ளன.
இதில் கத்தார், ஈகுவடார் அணிகள் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. போட்டியை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்த மோதலில் ஈகுவடாரின் கை ஓங்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
தொடக்க லீக் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
கத்தார்: அல் ஷீப், மிகெல், அல் வாரி, சல்மான், ஹசன், அகமது, ஹாதெம், போடிப், அல் ஹோடிஸ், அலி, அபிப்.
ஈகுவடார்: டாமின் கெஸ், பிரெசிடோ, டாரெஸ், ஹின் கேபி, எஸ்து பினான், கிரேசோ, கேசிடா, சிபீண்டெஸ், பிளாடா, வாலன்சியா, இபாரா.
தொடக்க லீக் ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னதாக போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் தென்கொரியாவை சேர்ந்த பி.டி.எஸ். இசைக்குழுவினரின் ஆட்டம் பாட்டம் நடைபெறுகிறது.