பிபா உலகக் கோப்பை: இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக்கிற்கு கத்தார் அழைப்பு
பிபா உலகக் கோப்பை இஸ்லாமிய போதக ஜாகிர் நாயக்கிற்கு கத்தார் அழைப்பு விடுத்து உள்ளது.
புதுடெல்லி
இந்தியாவில் பணமோசடி மற்றும் வெறுப்பு பேச்சு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் சர்ச்சைக்குரிய இந்திய இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக்கை பிபா உலகக் கோப்பை 2022 க்கு முன்னதாக மத ப்ரசாரம் செய்ய கத்தார் அழைப்பு விடுத்துள்ளதாக அல் அரேபியா செய்தி வெளியிட்டுள்ளது.
கத்தார் அரசுக்கு சொந்தமான விளையாட்டு சேனலான அல்காஸின் தொகுப்பாளரான பைசல் அல்ஹஜ்ரியை மேற்கோள் காட்டி, டுவிட்டர் பதிவில், "உலகக் கோப்பையின் போது மதபோதகர் ஜாகிர் நாயக் கத்தாரில் இருக்கிறார். மேலும் போட்டி முழுவதும் பல மத சொற்பொழிவுகளை வழங்குவார்" என்று எழுதியுள்ளார்.
ஜாகிர் நாயக் ஏற்கனவே 2022 பிபாஉலகக் கோப்பைக்கு முன்னதாக கத்தாரில் உள்ள தோஹாவை சென்று அடைந்துள்ளார், மேலும் அவர் நாட்டில் நடைபெறும் போட்டிகள் முழுவதும் மத சொற்பொழிவுகளை வழங்குவார்.
சமூக ஊடகங்களில், இந்த தகவலை பல நபர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் பகிர்ந்து கொண்டனர். கத்தார் அரசுக்கு சொந்தமான விளையாட்டு சேனலான அல்காஸின் தொகுப்பாளரான பைசல் அல்ஹஜ்ரி இதை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையை இந்தியா தடை செய்தது. ஜாகிர் நாயக் மீது இந்திய அரசு பணமோசடி தொடர்பாக குற்றச்சாட்டுகளை சுமத்தியதை அடுத்து, தப்பியோடிய ஜாகிர் நாயக் 2017 முதல் மலேசியாவில் தஞ்சம் அடைந்து உள்ளார்.
நாயக்கிற்கு மலேசியாவில் நிரந்தரக் குடியுரிமை இருந்தாலும், 2020 ஆம் ஆண்டில் "தேசிய பாதுகாப்பு" நலன்களுக்காக அந்நாட்டில் பிரசார உரை நிகழ்த்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
முஸ்லீம் பெரும்பான்மை நாட்டில் வாழும் இந்து மற்றும் சீன சமூகங்கள் குறித்து கருத்துகளை கூறி அமைதியை சீர்குலைக்கும் அவரது நோக்கம் குறித்து உள்ளூர் காவல்துறையினரால் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.