உலகக்கோப்பை கால்பந்து: கோஸ்டாரிகாவை வீழ்த்தியது ஜெர்மனி அணி


உலகக்கோப்பை கால்பந்து: கோஸ்டாரிகாவை வீழ்த்தியது ஜெர்மனி அணி
x

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இ பிரிவில் ஸ்பெயின் மற்றும் ஜப்பான் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறி உள்ளது.

தோகா,

22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்று நள்ளிரவு தோகாவில் உள்ள அல் பைட் ஸ்டேடியத்தில் நடந்த 'இ' பிரிவு லீக் ஆட்டத்தில் ஜெர்மனி மற்றும் கோஸ்டாரிகா அணிகள் மோதின.

பரபரப்பான தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் ஜெர்மனி வீரர் செர்ஜ் நாப்ரி தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். இதன்படி முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி முன்னிலை வகித்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியின் 58வது நிமிடத்தில் கோஸ்டாரிகா அணி வீரர் எல்ட்சின் தேஜேடா முதல் கோலை அடித்து போட்டியை சமன் பெறச் செய்தார். அவரைத்தொடர்ந்து சக அணி வீரர் வர்காஸ் 70-வது நிமிடத்தில் இரண்டாவது கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார்.

இந்த பரபரப்பான சூழலில் ஆட்டத்தின் 73 மற்றும் 85-வது நிமிடங்களில் ஜெர்மனி அணி வீரர் காய் ஹேவர்ட்ஸ் இரண்டு கோல்களை அடித்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து சக அணி வீரரான நிக்லஸ் புல்க்ரூக் மற்றொரு கோலை அடிக்க ஆட்டம் ஜெர்மனிக்கு சாதகமாக திரும்பியது. தொடர்ந்து பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் கோஸ்டாரிகா அணியால் மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

முடிவில் கோஸ்டாரிகாவை 4-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி வீழ்த்தியது. இருந்தபோதும் ஜெர்மனி அணியால் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதிபெற முடியாமல் போனது.

இதன்படி உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இ பிரிவில் ஜப்பான் அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஸ்பெயின் அணி 4 புள்ளிகளுடன் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெற்றது. இ பிரிவில் இடம்பெற்றிருந்த ஜெர்மனி மற்றும் கோஸ்டாரிக்கா அணிகள் முறையே 3 மற்றும் 4-வது இடம்பெற்று போட்டியில் இருந்து வெளியேறின.


Next Story