5 உலக கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் - ரொனால்டோ புதிய சாதனை
போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்ததன் மூலம் புதிய சாதனை படைத்தார்.
தோகா,
உலக கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு 'எச்' பிரிவில் அரங்கேறிய ஆட்டத்தில் போர்ச்சுகல், ஆப்பிரிக்க அணியான கானாவுடன் மோதியது. புகழ்பெற்ற வீரரும், போர்ச்சுகல் கேப்டனுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ களம் இறங்கியதால் அவர் மீது பலத்தை எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. களத்தில் பம்பரமாக சுழன்று வந்த ரொனால்டோ 30-வது நிமிடத்தில் கோல் போட்டார். ஆனால் அவர் எதிரணி வீரரை பவுல் செய்து விட்டு கோல் அடித்ததால் அது கோல் இல்லை என்று மறுக்கப்பட்டது. இதனால் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானார். முதல் பாதி ஆட்டம் 0-0 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.
இதனால் பிற்பாதி ஆட்டம் சூடுபிடித்தது. 65-வது நிமிடத்தில் போர்ச்சுகலுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பில் அந்த அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார். அவருக்கு இது 5-வது உலக கோப்பை தொடராகும். இதையும் சேர்த்து அவர் ஆடிய எல்லா உலக கோப்பை தொடரிலும் குறைந்தது ஒரு கோல் போட்டுள்ளார். இதன் மூலம் 5 உலக கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை 37 வயதான ரொனால்டோ படைத்தார். ஒட்டுமொத்தத்தில் அவர் உலக கோப்பையில் அடித்த 8-வது கோல் இதுவாகும்.
73-வது நிமிடத்தில் கானா வீரர் ஆந்த்ரே அயிவ் கோல் போட்டு சமனுக்கு கொண்டு வந்தார். ஆனால் அவர்களது மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. போர்ச்சுகல் அணியின் உலக கோப்பை அறிமுக வீரர்களான ஜோவ் பெலிக்ஸ் 76-வது நிமிடத்திலும், ரபெல் லியோ 78-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் போட்டு அசத்தினர். 89-வது நிமிடத்தில் கானா வீரர் ஒஸ்மான் புகாரி தலையால் முட்டி கோல் அடிக்க களத்தில் பரபரப்பு எகிறியது.
அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சி கைகூடவில்லை. முடிவில் போர்ச்சுகல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் கானாவை சாய்த்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.