உலகக் கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, அமெரிக்கா அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்


உலகக் கோப்பை கால்பந்து: இங்கிலாந்து, அமெரிக்கா அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
x

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து, அமெரிக்கா அணிகள் தங்களது கடைசி லீக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

தோகா,

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2' இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெறும்.

இதில் 10-வது நாள் நள்ளிரவில் 'பி' பிரிவில் ஒரே நேரத்தில் இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறின. அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நடந்த ஒரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி தனது அண்டை நாடான வேல்சை சந்தித்தது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே தாக்குதல் பாணியை தொடுத்த இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் கட்டுப்பாட்டில் தான் பந்து அதிக நேரம் (65 சதவீதம்) வலம் வந்தது. மார்கஸ் ராஷ்போர்டு அடித்த அருமையான ஷாட்டை வேல்ஸ் கோல்கீப்பர் டேனி வார்ட் தடுத்து நிறுத்தினார். முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.

பிற்பாதியில் இங்கிலாந்து அணியினர் தங்களது தாக்குதல் வேகத்தை அதிகரித்தனர். அதற்கு உடனடியாக பலன் கிடைத்தது. 50-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி முதல் கோல் அடித்தது. 'பிரீகிக்' வாய்ப்பில் தடுப்பு அரண்களை தாண்டி மார்கஸ் ராஷ்போர்டு பிரமாதமாக கோல் அடித்து அசத்தினார். அடுத்த நிமிடத்திலேயே இங்கிலாந்து அணி 2-வது கோலை போட்டது. கேப்டன் ஹாரிகேன் கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் பில் போடென் கோல் வலைக்குள் திணித்தார்.

56-வது நிமிடத்தில் வேல்ஸ் வீரர் கிப்பெர் மூர் கோல் வலையை நோக்கி அடித்த வலுவான ஷாட்டை இங்கிலாந்து கோல் கீப்பர் ஜோர்டான் பிக்போர்டு தடுத்தார். 68-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் மார்கஸ் ராஷ்போர்டு மீண்டும் கோல் அடித்தார். சக வீரர் கால்வின் பிலிப்ஸ் தட்டிக்கொடுத்த பந்தை ராஷ்போர்டு இடது காலால் உதைத்தார். அது எதிரணி கோல் கீப்பரின் காலில்பட்டு கோல் வலைக்குள் புகுந்தது. இது உலகக் கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து அணியின் 100-வது கோலாக அமைந்தது. இதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய 7-வது நாடு என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றது. முடிவில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் வேல்சை தோற்கடித்து 2-வது வெற்றியை தனதாக்கியது.

அல் துமாமா ஸ்டேடியத்தில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்கா-ஈரான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக நகர்ந்த இந்த போட்டியில் இரு அணியினரும் தாக்குதல் ஆட்டத்தில் கவனம் செலுத்தினர். அமெரிக்க வீரர்கள் கிறிஸ்டியன் புலிசிக் 11-வது நிமிடத்திலும், டிம் வியா 28-வது நிமிடத்திலும் பந்தை தலையால் முட்டி கோல் அடிக்க எடுத்த முயற்சியை ஈரான் கோல்கீப்பர் அலிரெஜா பெரன்வன்ட் முறியடித்தார்.

தொடர்ந்து 38-வது நிமிடத்தில் அமெரிக்காவின் செர்ஜினோ டெஸ்ட் கோல் வலையை நோக்கி தலையால் முட்டிய பந்தை சக வீரர் கிறிஸ்டியன் புலிசிக் மின்னல் வேகத்தில் காலால் உதைத்து கோல் வலைக்குள் அனுப்பினார். முதல் பாதியில் அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

2-வது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க போராடினாலும் தடுப்பு அரணை தகர்க்க முடியவில்லை. முடிவில் அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் ஈரானை தோற்கடித்து முதல் வெற்றியை ருசித்தது.

'பி' பிரிவில் லீக் சுற்று முடிவில் இங்கிலாந்து (2 வெற்றி, ஒரு டிரா 7 புள்ளி) முதலிடமும், அமெரிக்கா (ஒரு வெற்றி, 2 டிரா, 5 புள்ளி) 2-வது இடமும் பிடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றன. ஈரான் (ஒரு வெற்றி, 2 தோல்வி, 3 புள்ளி) 3-வது இடமும், வேல்ஸ் (ஒரு டிரா, 2 தோல்வி 1 புள்ளி) கடைசி இடமும் பிடித்து வெளியேறின.

2-வது சுற்றில், 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்த நெதர்லாந்து அணி, 'பி' பிரிவில் 2-வது இடம் பெற்ற அமெரிக்காவை எதிர்கொள்கிறது. வருகிற 3-ந் தேதி இரவு 8.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது. 'பி' பிரிவில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து , 'ஏ' பிரிவில் 2-வது இடம் பெற்ற செனகல் அணியை சந்திக்கிறது. 4-ந் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.


Next Story