பாகிஸ்தானில் சாலையில் கவிழ்ந்த வேன் மீது கார், ஜீப் மோதியதில் 13 பேர் பலி


பாகிஸ்தானில் சாலையில் கவிழ்ந்த வேன் மீது கார், ஜீப் மோதியதில் 13 பேர் பலி
x
தினத்தந்தி 25 Feb 2023 4:27 PM GMT (Updated: 15 March 2023 10:11 AM GMT)

பாகிஸ்தானில் டயர் வெடித்ததால் சாலையில் கவிழ்ந்த வேன் மீது கார், ஜீப் அடுத்தடுத்து மோதியதில் 13 பேர் பலியாகினர்.

வேன் டயர் வெடித்தது

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் கான் யார் மாவட்டத்தில் இருந்து காலை வேன் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. இந்த வேன் அங்குள்ள ருகன்பூர் பகுதியில் உள்ள விரைவு சாலையில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வேனின் டயர் வெடித்தது.

இதையடுத்து டிரைவர் வேனை நிறுத்த முயன்றார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடிய வேன் சாலையின் நடுவே கவிழ்ந்தது.

அடுத்தடுத்து மோதின

இதையடுத்து, வேனுக்கு பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த கார் கவிழ்ந்து கிடந்த வேன் மீது பயங்கரமாக மோதியது. அடுத்த சில நொடிகளில் பின்னால் வந்து கொண்டிருந்த ஜீப்பும் வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அடுத்தடுத்து நடந்த இந்த விபத்துகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

13 பேர் பலி

இந்த கோர விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 13 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் பலத்த காயம் அடைந்தனர்.அவர்களை மீட்பு குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தொடர்கதையாகும் விபத்துகள்

பாகிஸ்தானில் மோசமான சாலைகள் மற்றும் டிரைவர்களின் அஜாக்கிரதையால் இதுபோன்ற சாலை விபத்துகள் தொடர் கதையாகி வருகின்றன.கடந்த மாதம் பலூசிஸ்தான் மாகாணத்தின் லாஸ் பேலா நகரில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் 40 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.


Next Story