ஜி20: அமெரிக்க அதிபர், குழுவினருக்கு 400 அறைகள் முன்பதிவு
'ஜி-20' அமைப்பின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
புதுடெல்லி,
'ஜி-20' கூட்டமைப்பின் இந்த ஆண்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. அதன்படி கடந்த ஓராண்டாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 'ஜி-20' தொடர்பான மாநாடுகள் நடைபெற்றன. இறுதியாக 'ஜி-20' அமைப்பின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்பட 'ஜி-20' உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் இந்தியாவின் அழைப்பை ஏற்று, மாநாட்டில் பங்கேற்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
அந்த வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 'ஜி-20' மாநாடு தொடங்கும் 2 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது செப்.7-ந் தேதியே இந்தியா வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. மாநாட்டுக்கு முன்பு அவர் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கடந்த திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஜோ பைடன் இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. எனினும் ஜோ பைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.
இந்த நிலையில் ஜோ பைடன் இந்தியா வருவதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2 நாட்களாக ஜனாதிபதி ஜோ பைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்ற முடிவு வந்துள்ளது. எனவே அவரது பயணத்திட்டங்களில் எந்த மாற்றமும் இல்லை.
அதன்படி 'ஜி-20' உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜோ பைடன் 7-ந் தேதி (இன்று) இந்தியாவுக்கு புறப்படுகிறாா். அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி-ஜனாதிபதி ஜோ பைடன் இடையேயான இரு தரப்பு பேச்சுவாா்த்தை 8-ந் தேதி (நாளை) நடைபெறுகிறது. தொடா்ந்து, செப். 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் 'ஜி-20' உச்சிமாநாட்டு அமா்வுகளில் அவா் பங்கேற்பாா்.
இந்தநிலையில், ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் குழுவினர் தங்குவதற்காக டெல்லி ஐடிசி மவுரியாவில் 400 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன்பாக இந்தியா வந்திருந்த அமெரிக்க முன்னாள் அதிபர்களான ஜார்ஜ் டபிள்யூ புஷ், பில் கிளிண்டன், பராக் ஒபாமா ஆகியோர் மவுரியாவில் தான் தங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலக தலைவர்களுக்கு தங்கம் - வெள்ளி பாத்திரங்களில் விருந்து அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தண்ணீர் அருந்தும் குவளை முதல் உணவு சாப்பிடும் தட்டு வரை தங்கத்திலும் வெள்ளியிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.