பக்ரைன் மன்னர் அமீரகம் வருகை; அதிபர், துணை அதிபருடன் சந்திப்பு


பக்ரைன் மன்னர் அமீரகம் வருகை; அதிபர், துணை அதிபருடன் சந்திப்பு
x
தினத்தந்தி 25 Oct 2023 12:30 AM IST (Updated: 25 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

அமீரகத்துக்கு பக்ரைன் மன்னர் ஹமத் பின் ஈசா அல் கலீபா வருகை புரிந்தார். அப்போது அவர் அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது காசாவில் உள்ள மனிதாபிமான நெருக்கடி நிலை குறித்து தலைவர்கள் ஆலோசனை செய்தனர்.

அபுதாபி,

கடந்த 7-ந் தேதி ஹமாஸ் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசாவில் நடந்த இஸ்ரேலிய குண்டு வீச்சில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் குறிப்பாக பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து அமீரக அதிபரின் அரசியல் ஆலோசகர் டாக்டர் அன்வர் கர்காஸ் மனித ஒற்றுமைக்கான வேண்டுகோளை விடுத்தார்.

தொடர்ந்து வளைகுடா, அரபு நாடுகளின் தலைவர்கள் அமீரக தலைவர்கள், மந்திரிகளை தொடர்புகொண்டு வரும் நிலையில் அமீரக அதிபரை சந்திக்க வருவதாக பக்ரைன் மன்னர் ஹமத் தரப்பில் செய்தி வந்தது. இந்த நிலையில் நேற்று பக்ரைன் மன்னர் அபுதாபிக்கு திடீரென வருகை புரிந்தார்.

அவர் அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை சந்தித்தார். அபுதாபியில் அதிபரின் அரண்மனையில் நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பக்ரைன் மன்னர் ஹமத் இருநாடுகளுக்கு இடையேயான வலுவான உறவுகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து பேசினார். குறிப்பாக பிரதேச அளவில் முன்னேற்றங்கள், காசாவில் காணப்படும் மனிதாபிமான நெருக்கடி நிலை அதிகரித்து வருவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை செய்தனர். மேலும் காசாவில் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை பின்பற்றுவதற்கான அவசரத்தேவையை இருவரும் வலியுறுத்தினர்.

இந்த சந்திப்பிற்கு பிறகு பக்ரைன் மன்னர் ஹமத் அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து அமீரக துணை அதிபர் கூறும்போது, ''அபுதாபியில் எனது சகோதரரும், பக்ரைன் மன்னருமான ஹமத் பின் இசா அல் கலீபாவை சந்தித்தேன். எங்களது சந்திப்புகள் நிரந்தரமானது. எங்களது ஆலோசனைகள் தொடர்கின்றன. எங்களது அன்பும், சகோதரத்துவமும் நிரந்தரமானது மற்றும் உறுதியானது'' என கூறினார்.


Next Story