சார்ஜா அருங்காட்சியகத்தில் கண்காட்சியை ஆட்சியாளர் தொடங்கி வைத்தார்


சார்ஜா அருங்காட்சியகத்தில் கண்காட்சியை ஆட்சியாளர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 26 Oct 2023 2:00 AM IST (Updated: 26 Oct 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

சார்ஜா அருங்காட்சியகத்தில் கண்காட்சியை ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி தொடங்கி வைத்தார்

சார்ஜா,

சார்ஜா அருங்காட்சியகத்தில் நேற்று இந்தியாவில் முகலாயர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட உயர் ரக ஆபணங்கள் குறித்த கண்காட்சியை சார்ஜா ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி தொடங்கி வைத்தார்.

சார்ஜா அருங்காட்சியகத்தில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரிய பல பொருட்கள் கொண்டு வரப்பட்டு கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு குவைத்தில் உள்ள தார் அல் அத்தார் அல் இஸ்லாமிய அமைப்புடன் இணைந்து இந்தியாவில் முகலாயர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட உயர் ரக ஆபரணங்கள் மற்றும் பொருட்கள் கொண்ட சிறப்பு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த பொருட்கள் அனைத்தும் குவைத்தின் மறைந்த ஷேக் நாசர் சபா அல் அகமது அல் சபா மற்றும் ஷேக் ஹெஸ்ஸா சபா அல் சலேம் அல் சபா ஆகியோர் சேகரித்தது.

இந்த கண்காட்சியை நேற்று தொடங்கி வைக்க சார்ஜா ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி வருகை புரிந்தார். அவரை சார்ஜா வர்த்தகம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுத்துறை இயக்குனர் ஷேக் சலேம் பின் முகம்மது பின் சலேம் அல் காசிமி தலைமையிலான அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பின்னர் சார்ஜா ஆட்சியாளர் கண்காட்சியை திறந்து வைத்து அங்குள்ள பொருட்களை பார்வையிட்டார். அந்த பொருட்கள் குறித்து அதிகாரிகள் ஆட்சியாளரிடம் விவரித்தனர்.

இந்த கண்காட்சியில் தைமூர் ஆட்சியாளர் உலுக் பெக், அவரது பேரன் அமிர் தைமூர் ஆகியோரது பெயர்களுடன் கூடிய ரத்தினங்கள் உள்ளிட்ட அரியவகை ஆபரணங்கள் கொண்ட வாள், முகலாய பேரரசின் அரசர் ஷாஜஹான் 1637 மற்றும் 1638-ம் ஆண்டுகளில் பயன்படுத்திய பதக்கம், மோதிரம், கோடாரி உள்ளிட்ட 84 வகையான அரிய பல பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இவை இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் முகலாய அரசர்களின் சிறப்புகளை வெளிப்படுத்துக்கூடிய வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து பார்வையிட வேண்டும் என அருங்காட்சியக அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த கண்காட்சி அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் 14-ந் தேதி வரை நடக்கிறது.


Next Story