ஹத்தா, ராசல்கைமா பகுதிகளில் பெய்த மழையால் திடீர் நீர்வீழ்ச்சி


ஹத்தா, ராசல்கைமா பகுதிகளில் பெய்த மழையால் திடீர் நீர்வீழ்ச்சி
x
தினத்தந்தி 22 Oct 2023 12:30 AM IST (Updated: 22 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

ஹத்தா மற்றும் ராசல்கைமா பகுதிகளில் பெய்த மழையால் ஏற்பட்ட திடீர் நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் `செல்பி’ எடுக்க ஆர்வம் காட்டினர். இதுகுறித்து அமீரக தேசிய வானிலை மையம் கூறியிருப்பதாவது:-

துபாய்,

அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து குறைந்து வருவதால் இதமான காலநிலை நிலவிகிறது. தற்போது அவ்வப்போது மழையும் பெய்து வருவதால் மேலும் இதமான சூழ்நிலை இருந்து வருகிறது.

ஹத்தா, ராசல் கைமா, புஜேரா உள்ளிட்ட பகுதி மலைகள் நிறைந்துள்ளது. இதனால் இப்பகுதிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அமீரகத்தில் பெய்து வரும் மழை காரணமாக இப்பகுதிகளில் உள்ள மலைகளில் பல்வேறு இடங்களில் திடீர் நீர்வீழ்ச்சி உருவாகி, தண்ணீர் அருவியாக கொட்டுகிறது.

இந்த நீர்வீழ்ச்சிகளில் ஒரு சிலர் குளிப்பதுடன், அதற்கு முன்பு நின்றுக்கொண்டு `செல்பி' எடுத்தும் மகிழ்கின்றனர். எனினும் பொதுமக்கள் செல்பி எடுக்கும் போது, எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நீர்வீழ்ச்சியால் அந்த பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் மழைநீர் அதிகமாக தேங்கியிருப்பதை காண முடிந்தது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட குறைவான வேகத்தில் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

புஜேரா, கோர்பக்கான் பகுதிகளில் ஆலங்கட்டியுடன் கூடிய மழை பெய்தது. ஒரு சிலர் ஆலங்கட்டிகளை கையில் பிடித்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

மேலும் நேற்று காலை அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் சாலைகளில் பார்வைத்திறன் குறைந்து காணப்பட்டதால் வாகனங்கள் மெதுவாக செல்வதை காண முடிந்தது. இந்த மழை மேலும் சிலநாட்கள் அமீரகத்தில் நீடிக்கும்.

எனவே பொதுமக்கள் வெளி இடங்களுக்கு செல்லும் போது கவனமுடன் இருக்க வேண்டும். இந்த மழை காரணமாக புஜேரா, அல் அய்ன் மற்றும் ராசல் கைமா பகுதிகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், கோர்பக்கானின் சில பகுதிகளுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையும் விடப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story