காசா மக்களுக்கு 3 கோடி திர்ஹாம் உதவி; சார்ஜா ஆட்சியாளர் மனைவி அறிவிப்பு
இஸ்ரேல்-ஹமாஸ் போரால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு 3 கோடி திர்ஹாம் உதவிகளை அறக்கட்டளை மூலம் வழங்குவதாக சார்ஜா ஆட்சியாளரின் மனைவி ஷேக்கா ஜவகர் பிந்த் முகம்மது அல் காசிமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சார்ஜா,
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த 7-ந் தேதி போர் வெடித்தது. இந்த போர் காரணமாக இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து காசா பகுதியில் பல்வேறு வழிகளில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய தொடர் தாக்குதலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பலர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் பல்வேறு இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருகின்றனர்.
இஸ்ரேல் அரசின் இந்த தாக்குதலுக்கு ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.
சர்வதேச நாடுகள் போரை நிறுத்தி அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமீரக அரசு சிறப்பு விமானங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளும் மனிதாபிமானப் பணிகளை காசாவுக்கு வழங்கி வருகின்றன. இந்த நிலையில் சார்ஜாவில் செயல்பட்டு வரும் `தி பிக் ஹார்ட்' அறக்கட்டளை காசாவுக்கு 3 கோடி திர்ஹாம் உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. இதனை அந்த அறக்கட்டளையின் தலைவரும், சார்ஜா ஆட்சியாளரின் மனைவியுமான ஷேக்கா ஜவகர் பிந்த் முகம்மது அல் காசிமி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சார்ஜாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு `தி பிக் ஹார்ட்' அறக்கட்டளை உலகில் அகதிகள் மறுவாழ்வுக்கு உதவுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இதற்காக சார்ஜாவின் பல்வேறு பகுதிகளில் நிதி சேகரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட விரும்பும் நிறுவனங்கள், தனி நபர்கள் உள்ளிட்ட அனைவரும் உதவியினை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த உதவியின் மூலம் பாலஸ்தீன மக்களின் தேவைகளை தற்காலிகமாக தீர்க்க உதவியாக இருக்கும்.
கடந்த 2009-ம் ஆண்டு முதல் `சலாம் யா செகர்' என்ற திட்டத்தின் மூலம் பாலஸ்தீன மக்களுக்கு உதவிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.