பள்ளிக்கூட பஸ் பயணத்தை கண்காணிக்க புதிதாக `சலாமா செயலி'; அபுதாபியில் அறிமுகம்
அபுதாபியில் பள்ளிக்கூட பஸ் பயணத்தை கண்காணிக்க `சலாமா’ என்ற செயலி புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அபுதாபி ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-
அபுதாபி,
அபுதாபியில் பள்ளிக்கூட பஸ் போக்குவரத்து மாணவர்களை ஏற்றி செல்வதற்கு பெரும்பாலும் பயன்படுத்தும் வாகனமாக உள்ளது. இதில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் வருகிற பஸ் குறித்து செயலி மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக சலாமா என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் மாணவர்கள் வரும் பள்ளிக்கூட பஸ் எங்கு வருகிறது? அந்த மாணவர் அந்த பஸ்சில் உள்ளாரா? என்பது குறித்த அனைத்து விவரங்களையும் பெறலாம்.
இதில் கூடுதலாக அந்த பஸ் எப்போது புறப்பட்டது மற்றும் எப்போது குறிப்பிட்ட பகுதிக்கு வந்தடையும்? போன்ற தகவல்களையும் நேரடியாக அறிந்து கொள்ளமுடியும்.
சலாமா செயலி மூலம் அந்த பஸ்சில் உள்ள மேற்பார்வையாளரை பெற்றோர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு உரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை அவர்களது பெற்றோர்கள் உறுதி செய்துகொள்ள முடிகிறது. குடும்பத்தினரும் ஏதேனும் அவசர சூழ்நிலையில் உடனடியாக தொடர்புகொண்டு சம்பந்தப்பட்ட துறைகளை அணுகி துரிதமாக நடவடிக்கை எடுக்கவும் இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சலாமா செயலி மூலமாக அபுதாபியில் உள்ள அனைத்து பள்ளிக்கூட பஸ்கள் குறித்தும் தகவல்களை அறிந்துகொள்ள முடியும். இந்த செயலியில் பஸ்சில் பணியில் உள்ள மேற்பார்வையாளர்கள் மாணவர்களின் வருகையை பதிவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பஸ்சில் பயணம் செய்யும் அல்லது அதை தவறவிட்ட மாணவர்கள் குறித்து அறிந்துகொள்ளலாம்.
இந்த செயலி ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தின் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. காலையும், மாலையும் பஸ் வருகை குறித்த சரியான நேரத்தை பெற்றோர்கள் அறிந்துகொள்ளவும் இதனால் முடிகிறது. இந்த செயலி பயன்பாட்டுக்காக 32 பயிற்சியரங்குகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் அபுதாபியில் உள்ள 256 தனியார் பள்ளிக்கூடங்கள் மற்றும் 768 நர்சரி பள்ளிக்கூடங்களின் பிரதிநிதிகள், பஸ்சை இயக்கும் நிர்வாகங்கள், ஒருங்கிணைப்பாளர்கள், ஆண், பெண் மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே ஏதேனும் பள்ளிக்கூட பஸ் போக்குவரத்தில் டிரைவர்களின் விதிமீறல்கள் இருந்தால் பெற்றோர்கள் உடனடியாக புகார் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.