ஓமனில் லேசான நிலநடுக்கம்; 'தேஜ்' புயல் இன்று கரையை கடக்கிறது
ஓமனில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் ‘தேஜ்' புயல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கரையை கடக்கிறது. இது குறித்து ஓமன் தேசிய வானிலை மையம் கூறியிருப்பதாவது :
மஸ்கட்,
ஓமன் நாட்டின் சுர் பகுதியில் இருந்து வடகிழக்கில் கடல் பகுதியில் 57 கிலோமீட்டர் தொலைவில் நேற்று காலை திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் கடலின் ஆழத்தில் 5 கிலோ மீட்டர் தூரத்தில் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தை அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் உணர்ந்ததாக தெரிவித்தனர். ஆனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
ஓமன் நாட்டின் கடல் பகுதியில் இருந்து 870 கிலோ மீட்டர் தொலைவில் வெப்பமண்டல புயலான 'தேஜ்' நேற்று மையம் கொண்டிருந்தது. இந்த புயலானது இன்று (ஞாயிற்றுக்கிழமை) கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அரபிக் கடலில் காற்றின் வேகமானது 50 முதல் 63 நாட்டிக்கல் வேகத்தில் இருக்கும்.
எனவே தோபர் மாகாணத்திலும், ஏமன் நாட்டின் சில பகுதிகளிலும் புயலின் தாக்கம் இருக்கும். தோபர் மாகாணத்தில் இன்றும், நாளையும் கன மழை பெய்யக்கூடும்
எனவே ஓமனில் பல்கலைக்கழகம், கல்லூரி, பள்ளிக்கூடங்களுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் கல்வி நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை முதல் வழக்கம்போல் செயல்படும்.
'தேஜ்' புயலின் தாக்கத்தால் கடுமையான காற்று மற்றும் மழை காரணமாக தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்க கூடும். அந்த துறையானது முழுமையான விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோபர் மாநகராட்சியும் முழு எச்சரிக்கையுடன் தனது ஊழியர்களை தயார் நிலையில் வைத்துள்ளது.
இவ்வாறு அந்த மையம் தெரிவித்துள்ளது.