2 நாட்கள் சுற்றுப்பயணம்: ஓமன் மந்திரிகளுடன் இந்திய வெளியுறவு இணை மந்திரி முரளீதரன் சந்திப்பு
ஓமன் நாட்டில் இந்திய வெளியுறவு இணை மந்திரி முரளீதரன் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்த நாட்டின் மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மஸ்கட்:
ஓமன் நாட்டுக்கு இந்திய வெளியுறவு இணை மந்திரி வி.முரளீதரன் 2 நாட்கள் சுற்றுப் பயணமாக வருகை புரிந்தார். அவரை விமான நிலையத்தில் இந்திய தூதர் அமித் நாரங் உள்ளிட்ட ஓமன் வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.
தொடர்ந்து அவர் ஓமன் நாட்டின் தொழிலாளர் நலத்துறை மந்திரி டாக்டர் மகத் சேட் பா ஒவைனை சந்தித்து பேசினார். அப்போது தொழிலாளர் நலத்துறையில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து பேசப்பட்டது.
மேலும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக ஓமன் நாட்டில் இந்திய தொழிலாளர்களின் நிலைமை குறித்தும் பேசப்பட்டது.
இதையடுத்து, ஓமன் நாட்டின் பொருளாதாரத்துறை மந்திரி சேட் அல் சக்ரியுடன் மந்திரி முரளீதரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா மற்றும் ஓமன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பாரம்பரிய ரீதியிலான ஒத்துழைப்பு இருந்து வருகிறது. பொருளாதாரத்துறையில் இரு தரப்பு ஒத்துழைப்பை அதிகப்படுத்துவது குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர் மஸ்கட்டில் உள்ள சுல்தான் காபூஸ் பெரிய பள்ளிவாசலை பார்வையிட்டார். அவருக்கு பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் பள்ளிவாசலில் உள்ள பிரதான தொழுகை செய்யும் இடம், நூலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் பார்வையிட்டார். பிரமாண்டமான அந்த பள்ளிவாசலை பார்வையிட்டது குறித்து தனது 'எக்ஸ்' சமூக வலைத்தளத்தில் மந்திரி முரளீதரன் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், மஸ்கட் இந்திய பள்ளிக்கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மந்திரி முரளீதரன் பங்கேற்றார். மேலும் இந்திய சமூக மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினர், மருத்துவ நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் மந்திரி முரளீதரனுடன் சந்தித்து பேசினார்கள்.
அப்போது அவர்களின் பல்வேறு கருத்துகளை கேட்டார். அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்ததுடன், இந்திய-ஓமன் உறவுக்கு முக்கிய பங்கினை வகித்து வருவதற்கு பாராட்டு தெரிவித்தார்.