வீடுகளில் தீ விபத்து: பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோருக்கு 2 ஆயிரம் திர்ஹாம் அபராதம்
பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
அபுதாபி,
அபுதாபி தீயணைப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- அபுதாபியில் உள்ள வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டால் அது குறித்து கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவிப்பதற்காக கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் தீ விபத்து ஏற்பட்டு அதனை தடுக்க தண்ணீர் உள்ளிட்டவை எளிதில் கிடைக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. தீ விபத்து ஏற்பட்டால் அந்த கட்டிடத்தில் உள்ளவர்களை எச்சரிக்கும் வகையில் இருக்கும் அலாரம், தீ விபத்தை தடுக்கும் கருவிகள், வெளியேறும் வழிகள் உள்ளிட்டவை சரியாக இருக்க வேண்டும்.
இந்த தீ விபத்தை தடுக்க உதவும் கருவிகளுக்கு இடையூறாக கட்டிடங்களில் எந்தவிதமான பொருட்களையும் வைக்க கூடாது. கட்டிட உரிமையாளர்கள் இதனை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சோதனை செய்து உறுதிப்படுத்த வேண்டும். தீ விபத்தை தடுக்கும் கருவிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ அல்லது பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோருக்கு 2 ஆயிரம் திர்ஹாம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.