துபாய் ஜிடெக்ஸ் குளோபல் கண்காட்சி நிறைவு; துணை ஆட்சியாளர் பங்கேற்பு
ஜிடெக்ஸ் குளோபல் தொழில்நுட்ப கண்காட்சியை அமீரக துணை பிரதமரும், நிதி மந்திரியும், துபாயின் முதலாவது துணை ஆட்சியாளருமான மேதகு ஷேக் மக்தூம் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் இந்திய அரங்கை தூதர் சஞ்சய் சுதிர் நேரில் பார்வையிட்டார்.
துபாய்,
ஜிடெக்ஸ் குளோபல் தொழில்நுட்ப கண்காட்சி நிறைவு நாளான நேற்று அமீரக துணை பிரதமரும், நிதி மந்திரியும், துபாயின் முதலாவது துணை ஆட்சியாளருமான மேதகு ஷேக் மக்தூம் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் இந்திய அரங்கை தூதர் சஞ்சய் சுதிர் நேரில் பார்வையிட்டார்.
துபாயில் 43-வது முறையாக நடைபெறும் 5 நாள் ஜிடெக்ஸ் தொழில்நுட்ப கண்காட்சி உலக வர்த்தக மையத்தில் கடந்த 16-ந் தேதி தொடங்கியது. கண்காட்சியில் நடப்பு ஆண்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களின் நவீன புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை அரங்குகளில் காட்சிப்படுத்தின.
கண்காட்சியை அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் திறந்து வைத்து அரங்குகளை பார்வையிட்டார்.
பெரிய அளவில் நடத்தப்பட்ட ஜிடெக்ஸ் குளோபல் தொழில்நுட்ப கண்காட்சி 27 லட்சம் சதுர அடி பரப்பளவில் 6 ஆயிரம் தொழில்நுட்ப நிறுவனங்கள் அரங்குகளை அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கண்காட்சியில் 180 நாடுகளில் இருந்து சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் நிபுணர்கள் பங்கேற்றனர்.
கண்காட்சியை அமீரக துணை பிரதமரும், நிதி மந்திரியும், துபாயின் முதலாவது துணை ஆட்சியாளருமான மேதகு ஷேக் மக்தூம் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது அவருடன் நிதி விவகாரங்களுக்கான ராஜாங்க மந்திரி முகம்மது பின் ஹாதி அல் ஹுசைனி, துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை பொது இயக்குனர் ஹெலால் அல் மர்ரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்த கண்காட்சியில் இந்தியாவில் இருந்தும் சுமார் 400-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தின.
இதற்காக இந்திய தொழில்நுட்ப தொழில்துறையின் உச்ச அமைப்பான நாஸ்காம் ஆதரவில் நிறுவனங்கள் பங்கேற்றிருந்தது. இந்திய அரங்கை தூதர் சஞ்சய் சுதிர் நேரில் பார்வையிட்டார்.
இறுதி நாளான நேற்று உலக வர்த்தக மையத்திற்கு செல்லும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.கடந்த 5 நாட்கள் நடந்த இந்த கண்காட்சி நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.