அரபிக்கடலில் வலுவடைந்த தேஜ் புயல்: ஓமனில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
: ஓமனில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மஸ்கட்,
அரபிக்கடலில் மையம் கொண்டு இருந்த தேஜ் புயல் நேற்று தீவிர புயலாக வலுவடைந்துள்ளது. இதில் தென்மேற்கு அரபிக்கடலில் தேஜ் புயல் மையம் கொண்டுள்ளது. இந்தியாவிலும் வானிலை எச்சரிக்கை செய்யப்பட்டுள்ள நிலையில் ஓமனில் தோபர் மாகாணத்திலும் புயல் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் வானிலை மாற்றம் காரணமாக காற்றுடன் கனமழை பெய்தது. இதனை கவனத்தில் கொண்டு ஓமன் தேசிய அவசர மேலாண்மை கமிட்டி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஓமனில் தேஜ் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனை கவனத்தில் கொண்டு தோபர் மாகாணத்தின் அல் ஹலனியாத் தீவுகள், சலாலாவின் கடற்கரை பகுதிகள், ரக்யுத் மற்றூம் தல்குத் ஆகிய பகுதிகளில் நேரடி பாதிப்பு ஏற்படும் என்பதால் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கடும் புயலால் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை கவனத்தில் கொண்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தேசிய அவசர மேலாண்மை கமிட்டி அறிவித்துள்ளது.
பாதிப்படையும் மக்கள் தோபர் மாநகராட்சியின் 1771 என்ற எண்ணை தொடர்புகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக மஸ்கட்டில் இருந்து ஹைமா, மர்முல் வழியாக சலாலா செல்லும் பஸ்கள் சேவை தற்காலிகமாக மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் அல் ஹலனியாத் பகுதியில் படகு சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மவுசலாத் அரசு போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.