அமீரகத்தை சுற்றி
அமீரகத்தை சுற்றி உள்ள செய்திகள்
அபுதாபி
* அபுதாபியில் மிரால் நிறுவனத்தின் செயல் இயக்குனர் தக்ரித் அல் சயீத், அமீரக அறக்கட்டளையின் தலைமை செயல்பாட்டுத்துறை அதிகாரி மொகன்னா ஒபைத் அல் மெகைரி ஆகியோர் அமீரகத்தில் இளைஞர்களின் திறமையை மேம்படுத்துதல் மற்றும் சமூக நலம் உள்ளிட்டவற்றை குறித்த பயிற்சிகளை வழங்குவது தொடர்பாக இரு தரப்பு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
* அபுதாபி நீதித்துறையின் வழக்கறிஞர் விவகாரத்துறைக்கான கமிட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பில், 9 புதிய வழக்கறிஞர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
துபாய்
* துபாய் இஸ்லாமிய விவகாரத்துறையின் செயல் இயக்குனர் டாக்டர் ஒமர் முகம்மது அல் கத்திப் தலைமையில் டாக்டர் அகமது பின் அப்துல் அஜீஸ் அல் ஹத்தாத் மற்றும் டாக்டர் அப்துல் ரஹ்மான் அல் முல்லா உள்ளிட்ட குழுவினர் எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் நடந்து வரும் 8-வது உலக பத்வா கருத்தரங்கில் பங்கேற்றுள்ளனர்.
* துபாயில் தனியார் நிறுவனம் நடத்திய அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கலில் கேரளாவைச் சேர்ந்த 40 வயது வாலிபர் நமச்சிவாயம் ஹரிஹரன் 10 லட்சம் அமெரிக்க டாலர் பரிசை பெற தேர்வு செய்யப்பட்டார். அவர் இந்த பரிசை தனது 5 நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வேன் என தெரிவித்தார். துபாயில், 26 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த பரிசை பெறும் 218-வது இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
* அமீரகத்தில் பணிபுரிந்து வரும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 82 சதவீத ஊழியர்கள் அமீரகத்துக்குள்ளேயே பல்வேறு நிறுவனங்களில் தங்களின் வேலைகளை மாற்றிக் கொள்ள திட்டமிட்டுள்ளனர் என சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சார்ஜா
* சார்ஜா அல் ஜாஹியா சிட்டி சென்டரில் இன்வெஸ்ட் வங்கியின் புதிய கிளையை சார்ஜா துணை ஆட்சியாளர் மற்றும் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவருமான மேதகு ஷேக் சுல்தான் பின் அகமது பின் சுல்தான் அல் காசிமி திறந்து வைத்தார். பின்னர் அவர் அந்த வங்கி கிளையில் உள்ள பல்வேறு வசதிகளை பார்வையிட்டார்.