அமீரகத்தை சுற்றி
அமீரகத்தை சுற்றி உள்ள செய்திகள்
அபுதாபி
* அடையாளம், குடியுரிமை, சுங்கவரி மற்றும் துறைமுக பாதுப்புக்கான மத்திய ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''அமீரகத்தை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கு தற்போது 30, 60 மற்றும் 90 நாட்களுக்கான விசிட் விசா வழங்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறுத்தி வைக்கப்பட்ட 90 நாட்களுக்கான விசா வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த விசா மீண்டும் நிறுத்தப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய்
* துபாயில் விமான கண்காட்சி அடுத்த மாதம் (நவம்பர்) 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது. இந்த கண்காட்சியையொட்டி விமானத்துறையில் ஈடுபட்டு வரும் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்க இருக்கின்றன. இதன் மூலம் விமான வர்த்தகம் முக்கிய பங்கினை வகிக்கும். மேலும் இந்த கண்காட்சியையொட்டி நடக்கும் கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்ட வல்லுனர்கள் பங்கேற்று பேசுகிறார்கள்.
* துபாய் பெண்கள் சங்கத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த 30 நபர்கள் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற அவர்கள் தங்களின் வாழ்க்கை அனுபவித்தை பகிர்ந்து கொண்டனர். மேலும் சரியான முறையில் வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினர்.
சார்ஜா
* சார்ஜா பட்டத்து இளவரசர், துணை ஆட்சியாளர் மற்றும் நிர்வாகக் குழு தலைவருமான மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது பின் சுல்தான் அல் காசிமி தலைமையில் போலீஸ் அறிவியல் அகாடமியின் நிர்வாக கவுன்சில் கூட்டம் நடந்தது. அப்போது பேசிய பட்டத்து இளவரசர் போலீஸ் துறையில் ஊழியர்களின் திறமையை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். கூட்டத்தில் போலீஸ் அகாடமியின் பட்டமளிப்பு விழா நடத்துவது குறித்தும் முடிவு செய்யப்பட்டது.
* சார்ஜா அமெரிக்க பல்கலைக்கழகம் உலகின் முதல் 10 அரபு பல்கலைக்கழகங்களில் சிறந்த பல்கலைக்கழகமாக இடம் பெற்றுள்ளது. இந்த புள்ளி விவரத்தை சர்வதேச நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் அமீரக அளவில் உள்ள பல்கலைக்கழகங்களில் 3-வது இடத்தை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ராசல் கைமா
* ராசல் கைமா ஆட்சியாளர் மேதகு ஷேக் சவுத் பின் சகர் அல் காசிமி, ராசல் கைமாவில், டிஜிட்டல் தொழில் நிறுவனங்களுக்கான உலகின் முதலாவது சிறப்பு பொருளாதார மண்டலத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, ''ராசல் கைமா பகுதியில் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியை அதிகரித்து அமீரக பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் உதவியாக இருக்கும்'' என்றார்.