சூரியனை சுற்றி வரும் சிறுகோளுக்கு கலீபா பல்கலைக்கழக பேராசிரியரின் பெயர் சூட்டப்பட்டது


சூரியனை சுற்றி வரும் சிறுகோளுக்கு கலீபா பல்கலைக்கழக பேராசிரியரின் பெயர் சூட்டப்பட்டது
x
தினத்தந்தி 26 Oct 2023 2:00 AM IST (Updated: 26 Oct 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

சூரியனை சுற்றி வரும் சிறுகோளுக்கு கலீபா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் முகம்மது ராமி எல் மர்ரியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அபுதாபி,

அபுதாபியில் வசிக்கும் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் முகம்மது ராமி எல் மர்ரி எகிப்து நாட்டை சேர்ந்தவர். இவர் கலீபா பல்கலைக்கழகத்தின் விண்வெளி மற்றும் கோள்கள் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

வானியல் நிபுணரான டாக்டர் முகம்மது ராமி எல் மர்ரி விண்கற்கள் அல்லது சிறுகோள்களில் உள்ள நிலப்பரப்பு மற்றும் மண்ணின் தன்மையை ஆய்வு செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்தவர். இவரது ஆராய்ச்சிகள் கிரகங்களின் மேற்பரப்பு, அதன் தன்மை, கிரகங்களின் புவியியல் குறித்த தரவுகள் சேகரிப்பு, மாதிரி தயாரிப்பு, ஆய்வக பணிகள் உள்ளிட்டவைகளை அடக்கியது. முக்கியமாக கடந்த 16 ஆண்டுகளாக பல்வேறு சர்வதேச விண்வெளி பயணங்களில் முக்கிய பங்கினை வகித்துள்ளார்.

நமது சூரிய குடும்பத்தின் விளிம்பில் உள்ள கைபர் பெல்ட் போன்ற தூசு படலங்களில் உள்ள பொருட்களை ஆய்வு செய்தார். அதேபோல் வரவிருக்கும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் நிலவுக்கான ரோவர், அமீரகத்தின் நிலவு பயணம் மற்றும் சிறுகோள் பட்டையின் ஆராய்ச்சி ஆகியவற்றில் பங்கேற்றுள்ளார். இவரது வானியல் சாதனைகளை கவுரவிக்கும் வகையில் தற்போது சர்வதேச வானியல் ஒன்றியம் சூரியனை சுற்றி வரும் சிறுகோள் ஒன்றுக்கு `எல் மர்ரி' என்ற பெயரை சூட்டியுள்ளது. இந்த சிறுகோள் இதுவரை 2002 சி.இசட் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.

சர்வதேச வானியல் ஒன்றியம் அளித்துள்ள கவுரவம் குறித்து டாக்டர் முகம்மது ராமி எல் மர்ரி அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்த கவுரவத்தை தாழ்மையுடன் பெறுகிறேன். ஒரு வகையில் நான் வாழ்நாள் சாதனையாளர் விருதாக பார்க்கிறேன். அடுத்த தலைமுறையினருக்கு அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் மீதான ஈர்ப்பை வழங்குவதற்கு ஊக்கப்படுத்துவதாக இருக்கும் என நான் நினைக்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கவுரவத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


Next Story