கடந்த 8 மாதங்களில் துபாயில், இ-ஸ்கூட்டர் விபத்தால் 5 பேர் பலி; 29 பேர் படுகாயம்


கடந்த 8 மாதங்களில் துபாயில், இ-ஸ்கூட்டர் விபத்தால் 5 பேர் பலி; 29 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 25 Oct 2023 12:30 AM IST (Updated: 25 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

இ-ஸ்கூட்டர் விபத்தால் 5 பேர் பலியாகி உள்ளனர்.

துபாய்,

துபாய் போக்குவரத்து போலீஸ் துறை இயக்குனர் சைப் முகைர் அல் மஸ்ரூயி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

துபாயில் இ-ஸ்கூட்டர் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் இ-ஸ்கூட்டர் ஓட்டுபவர்களுக்காக பிரத்யேக பாதைகளை அமைத்துள்ளது. மேலும் பல்வேறு உட்புற சாலைகளிலும் இ-ஸ்கூட்டர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இ-ஸ்கூட்டர் உள்ளிட்ட சைக்கிள்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு விதிமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும். குறிப்பாக ஹெல்மெட் மற்றும் பாதுகாப்பு உடையுடன் பயணிக்க வேண்டும். இ-ஸ்கூட்டரின் முன் மற்றும் பின்புறத்தில் விளக்குகள் சிவப்பாகவோ அல்லது பிரகாசமாகவோ எரிவதை உறுதி செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்.

இத்தகைய விதிமுறைகளை சரிவர பின்பற்றாதவர்களால் நடப்பு ஆண்டின் முதல் 8 மாதங்களில் மட்டும் 32 விபத்துகள் பதிவாகி உள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 29 பேர் படுகாயம் அடைந்தனர். விதிமீறல் காரணமாக நடப்பு ஆண்டில் மட்டும் 10 ஆயிரம் திர்ஹாமுக்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டது.

இ-ஸ்கூட்டரை பயன்படுத்தும் போது ஆபத்தான வகையில் ஓட்டிச் செல்பவர்களுக்கு 300 திர்ஹாம் அபராதம் விதிக்கப்படும். மேலும் 16 வயதுக்கு கீழ் உள்ளவர் இ-ஸ்கூட்டர்களை பயன்படுத்தக்கூடாது. பிரதான சாலைகளில் இ-ஸ்கூட்டர்களை ஓட்டிச் செல்லக்கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story