புத்தகம் படிக்கும்போது உட்காரும் முறைகள்


புத்தகம் படிக்கும்போது உட்காரும் முறைகள்
x
தினத்தந்தி 21 Aug 2022 7:00 AM IST (Updated: 21 Aug 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

புத்தகம் வாசிக்கும்போது முதுகெலும்பு நேராக இருந்தால்தான் பிற்காலத்தில் முதுகு வலி வருவதைத் தடுக்க முடியும். நீண்ட நேரம் நேராக உட்காருவது கடினமாக இருந்தால் தலையணை போன்ற மிருதுவான பொருளை முதுகுக்கு பின்னால் வைத்துக்கொள்ளலாம்.

பெண்களின் ஓய்வு நேரத்தை சுவாரசியமாக்கும் பல விஷயங்களில், புத்தகம் படிப்பதும் ஒன்றாகும். நாவல்கள் அல்லது சிறுகதைகள் வாசிக்கும்போது பலர் தங்களையே மறந்து, எந்த நிலையில் உட்கார்ந்து வாசிக்கிறோம் என்பதை கவனிக்காமல் கதையில் கவனம் செலுத்துவார்கள். இவ்வாறு தவறான கோணத்தில் அமர்ந்து புத்தகம் படித்தால், உடலில் பாதிப்புகள் ஏற்படலாம். புத்தகம் வாசிக்கும்போது சரியான கோணத்தில் உட்காருவது எப்படி என்பதை இங்கே காணலாம்.

1) நாற்காலி, சோபா போன்றவற்றில் அமர்ந்து புத்தகம் வாசிக்கும்போது, சிலர் வரிக்கு வரி இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக தலையை அசைத்து வாசிப்பார்கள். இதனால் கழுத்து வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. முழுவதுமாக தலையை அசைப்பதற்கு பதிலாக, கண்களை மட்டும் அசைத்து வாசிப்பது நல்லது.

2) புத்தகத்தை மடியில் அல்லது தரையில் வைத்து தலை குனிந்து வாசிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் கழுத்துக்கும், முதுகுத் தசைக்கும் அழுத்தம் ஏற்படலாம். முழங்கைகளை மடக்கி, புத்தகத்தை கண்களுக்கு நேராக பிடித்தபடி வாசிப்பதே சிறந்ததாகும். எடை அதிகமுள்ள லேப்டாப் போன்றவற்றில் இ-புத்தகம் வாசிக்கும்போது, மேஜையில் கண்களுக்கு நேராக அவற்றை வைத்து வாசிப்பது நல்லது.

3) நாற்காலி, சோபா, பெஞ்ச் போன்றவற்றில் உட்கார்ந்து படிக்கும்போது, வசதியான இருக்கையை தேர்ந்தெடுத்து, முழு முதுகும் பின்னால் நேராக சாய்ந்து இருக்கும்படி, முழங்கால்கள் 90 டிகிரி கோணத்தில், கால்கள் தரையை தொட்டவாறு இருக்க வேண்டும்.

4) போதுமான வெளிச்சம் இருக்கும் அறையில் புத்தகம் படிப்பது நல்லது. இ-புத்தகம் வாசிக்கும்போது அறையின் வெளிச்சத்தை விட, இ-புத்தகம் வாசிக்கும் சாதனத்தில் அதிகமாக வெளிச்சம் வந்தால் அது கண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம். அறையின் வெளிச்சத்திற்கு ஏற்றவாறு இ-புத்தகத்தின் வெளிச்சத்தை கட்டுப்படுத்தி வாசிக்கலாம்.

5) தரையில் அமர்ந்து புத்தகம் வாசிக்கும்போது, கால்களை நீட்டி, முதுகை நேராக வைத்தபடி உட்கார்ந்துதான் படிக்க வேண்டும். மடியில் வைத்து புத்தகத்தை வாசித்தால் கழுத்து மற்றும் தோள்பட்டையில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்தவரை கண்களுக்கு நேராக புத்தகத்தை வைத்து வாசிப்பது நல்லது.

6) புத்தகம் வாசிக்கும்போது முதுகெலும்பு நேராக இருந்தால்தான் பிற்காலத்தில் முதுகு வலி வருவதைத் தடுக்க முடியும். நீண்ட நேரம் நேராக உட்காருவது கடினமாக இருந்தால் தலையணை போன்ற மிருதுவான பொருளை முதுகுக்கு பின்னால் வைத்துக்கொள்ளலாம்.

7) ஒரு மணி நேரம், புத்தகம் வாசித்த பிறகு அந்த இடத்தை விட்டு எழுந்து சில நிமிடங்கள் நடக்க வேண்டும். கால்களுக்கு சீராக ரத்த ஓட்டம் பாய்வதற்கு பாதங்களை நன்றாக சுழற்றி மேலும், கீழும் அசைக்க வேண்டும். கை, கால்களை அசைக்கின்ற சில எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம். சுமார் ஐந்து நிமிடம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் புத்தகம் வாசிப்பதில் ஈடுபடலாம்.


Next Story