புகைப்படக்கலையில் சாதிக்கும் இரட்டை சகோதரிகள்


புகைப்படக்கலையில் சாதிக்கும் இரட்டை சகோதரிகள்
x
தினத்தந்தி 3 Sept 2023 7:00 AM IST (Updated: 3 Sept 2023 7:00 AM IST)
t-max-icont-min-icon

புகைப்படக்கலையைப் பற்றி முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் பெண்கள், இந்த துறை சார்ந்த வல்லுனர்களிடம் உதவியாளராக பணியாற்றலாம். இதன் மூலம் பல விஷயங்களை தெரிந்துகொள்ள முடியும்.

"ஆர்வமும், விடாமுயற்சியும் இருந்தால் உங்களால் எதையும் சாதிக்க முடியும்" என்கிறார்கள் மதுரை சின்ன கடை வீதியைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் கார்த்திகா-பிரதீபா.

புகைப்படக்கலை துறையில், ஆண்களுக்கு இணையாக தற்போது பெண்களும் சாதித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த இரட்டை சகோதரிகளும் ஒன்றாக இணைந்து, போட்டோ கிராபராகவும், வீடியோ கிராபராகவும் தங்களுக்கென தனி இடத்தை பிடித்துள்ளனர்.

சாதாரண மாடல்களில் தொடங்கி, தற்போது தமிழ் திரையுலக சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரையும் 'மாடல் ஷூட்' செய்து வருகிறார்கள். இதற்கென எந்த வகுப்புக்கும் செல்லாமல், ஆர்வத்தின் காரணமாக தாங்களாகவே முயற்சி செய்து கற்று, புகைப்படத்துறையில் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர் இந்த இரட்டையர்கள். அவர்களது சுவாரசியமான பேட்டி...

பிரதீபா: "எங்களது சொந்த ஊர் மதுரை. வளர்ந்தது, படித்தது எல்லாமே அங்கேதான். நான் வீடியோ கிராபர். என்னுடைய சகோதரி கார்த்திகா போட்டோ கிராபர். நாங்கள் இருவருமே எம்.காம். படித்திருக்கிறோம்.

படிப்பு ரீதியாக எங்களுக்கும், நாங்கள் தற்போது செய்யும் இந்த தொழிலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. கல்லூரியில் சேர்ந்த காலகட்டத்தில் புகைப்படக்கலை தொடர்பாக 'விஸ்காம்' என்ற படிப்பு இருப்பதைக்கூட நாங்கள் அறிந்திருக்கவில்லை. கார்த்திகா அவ்வப்போது ஆர்வமாக புகைப்படம் எடுத்து வந்தார். இப்போது அதுவே எங்கள் தொழிலாக மாறியுள்ளது. தற்போது பல இடங்களுக்கு சென்று வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப புகைப்படங்களை எடுத்துக் கொடுக்கிறோம்."

புகைப்படக்கலையில் உங்கள் இருவருக்கும் ஆர்வம் வந்தது எப்படி?

பிரதீபா: "இளங்கலை படித்துக்கொண்டு இருந்தபோது பெற்றோரிடம் அடம்பிடித்து ஒரு கேமராவை வாங்கினார் என் சகோதரி கார்த்திகா. அந்த சமயத்தில் கேமரா பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. அந்தக் கேமராவைக்கொண்டு நாங்களாகவே படிப்படியாக புகைப்படம் எடுக்க கற்றுக் கொண்டோம்.

எங்களுடைய வீட்டின் அருகில் உள்ளவர்கள், நண்பர்கள் என பொழுதுபோக்காக எதையாவது புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தோம். நண்பர்களை மாடலாக வைத்து புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் தினமும் பதிவிட்டு வந்தோம். நாங்கள் எடுத்த புகைப்படங்கள் 'அழகாக இருக்கிறது' என பார்ப்பவர்கள் கூறியபோது, எங்களுடைய ஆர்வம் மேலும் அதிகரித்தது. இவ்வாறே புகைப்படக்கலை துறையில் எங்கள் இருவரது பயணமும் தொடர்ந்தது. பலரும் அவர்கள் வீட்டு சுப நிகழ்வுகளை புகைப்படம் எடுக்க எங்களை அழைக்க ஆரம்பித்தார்கள். அவ்வாறு புகைப்படத்துறையில் கால்பதித்த நாங்கள் இப்போது பல பிரபலங்களை 'மாடல் ஷூட்' செய்கிறோம்."

நீங்கள் இருவரும் வேலை செய்யும் விதத்தைப் பற்றி சொல்லுங்கள்?

கார்த்திகா: "புகைப்படக்கலை துறையில் சிலர் 'மாடல் ஷூட்' மட்டும் எடுப்பவர்களாக இருப்பார்கள். சிலர் சுப நிகழ்வுகளை மட்டும் படம் பிடிப்பார்கள். புதிதாக பிறந்த குழந்தைகளை புகைப்படம் எடுக்கும் 'நியூ பார்ன் ஷூட்', நிறுவனங்களின் தயாரிப்புகளை படம் எடுக்கும் 'புராடக்ட் ஷூட்' என அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப புகைப்படக்கலை துறையில் ஈடுபடுவார்கள். நாங்கள் இவை எல்லாவற்றிலும் முத்திரை பதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அவ்வாறே செயல்பட்டு வருகிறோம்.

ஒரு பெரிய பட்ஜெட் ஷூட்டை தனி நபராக செய்து முடிப்பது சற்றே சிரமமான விஷயம். அதை எளிதாக்கும் வகையில் அசிஸ்டன்ட் போட்டோகிராபர், அசிஸ்டன்ட் வீடியோகிராபர், எடிட்டர், லைட் மேன் என பிரீலான்ஸ் முறையில் பணியாற்றும் பத்துக்கும் மேற்பட்டோர் எங்களுடன் பணிபுரிகின்றனர்."

புகைப்படம் எடுப்பதற்கான அழகான இடங்களை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?

பிரதீபா: "இணையத்தில் நாங்கள் பார்க்கும் அழகான இடங்களை தேர்வு செய்து வைத்திருப்போம். அதில் போட்டோ ஷூட் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் இடங்களை பயன்படுத்திக்கொள்கிறோம்.

எங்களுடைய வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற அழகிய இடங்களை நாங்களே பரிந்துரைக்கிறோம். பின்னர் அவர்களின் விருப்பத்திற்கேற்ப இடங்களை தேர்வு செய்து போட்டோ ஷூட் செய்கிறோம். இதற்காக பல இடங்களுக்கு பயணம் செய்து புகைப்படங்கள் எடுத்து வருகிறோம்."

உங்களது பயணங்கள் பற்றி கூறுங்கள்?

கார்த்திகா: "போட்டோ ஷூட்டிற்காக நாங்கள் ஒவ்வொரு இடங்களுக்கு செல்லும்போதும் எங்களுக்கு புதுப்புது அனுபவங்கள் கிடைக்கும். நாங்கள் போகிற இடங்களில் எல்லாம் பாதுகாப்பாகவே உணர்கிறோம். எங்கள் குழுவினர் எப்போதும் எங்களுடன் இருப்பார்கள். சூழ்நிலைக்கும், நேரத்திற்கும் ஏற்றதுபோல எங்களுடைய வேலைகளை பிரித்துக்கொண்டு செய்கிறோம்."

உங்கள் இருவருக்கும் குடும்பத்தினரின் ஆதரவு எவ்வாறு உள்ளது?

பிரதீபா: "ஆரம்பத்தில் கேமரா வாங்கித் தந்து உற்சாகப்படுத்தியது எங்கள் அப்பா தான். நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றுவதால், ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வோம் என இரவு நேர ஷூட்டிங் செல்லும்போது பெற்றோர் தைரியமாக இருக்கிறார்கள். எங்களைப் பற்றி பெருமையாக உணர்கிறார்கள். எங்கள் விருப்பத்தை தேர்வு செய்வதில் முழு ஆதரவும், சுதந்திரமும் அளித்திருக்கிறார்கள்'' எனறார்.

"பெண்களால் இந்த துறையில் சாதிக்க முடியுமா? பெண்களுக்கு இது பாதுகாப்பானதா? நிறைய முதலீடுகள் செய்ய வேண்டுமே? என்பது போன்ற கேள்விகள் பல பெண்களுக்குள் இருக்கின்றன. பெண்களுக்கு ஆர்வம் இருந்தால் புகைப்படக்கலை துறையில் நிச்சயமாக சாதிக்க முடியும். அதற்கு முயற்சியும், படைப்பாற்றலும் இருந்தாலே போதும்.

தற்போது கேமரா, லைட்ஸ் என தேவையான உபகரணங்கள் அனைத்துமே வாடகைக்கு கிடைக்கின்றன. புகைப்படக்கலையைப் பற்றி முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் பெண்கள், இந்த துறை சார்ந்த வல்லுனர்களிடம் உதவியாளராக பணியாற்றலாம். இதன் மூலம் பல விஷயங்களை தெரிந்துகொள்ள முடியும்" என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்கள் சகோதரிகள் இருவரும்.

இன்புளூயன்சியல் வெட்டிங் போட்டோகிராபர் விருது, பெண் தொழில் முனைவோர் விருது போன்ற பல்வேறு விருதுகளை இந்த இரட்டையர்கள் பெற்றிருக்கிறார்கள். தாங்கள் படித்த கல்லூரியிலேயே, மகளிர் தின விழா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று கவுரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.


Next Story