எளிமையான முறையில் எலாஸ்டிக் படுக்கைவிரிப்பு தயாரித்தல்
இந்த எலாஸ்டிக் விரிப்பைப் பற்றிய புகைப்படங்களை உங்கள் தொடர்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய குடியிருப்பில் வசிப்பவர்கள், உறவினர்கள் என தைத்துக் கொடுக்க ஆரம்பித்து, பிறகு தொழில்முறையில் தயாரிக்கத் தொடங்கலாம்.
குழந்தைகள் இருக்கும் வீட்டில், மெத்தையின் மீது போட்டிருக்கும் படுக்கை விரிப்பை அடிக்கடி சரிப்படுத்துவது இல்லத்தரசிகளுக்கு தினசரி வேலையாகும். குழந்தைகள் மெத்தையின் மீது ஏறி விளையாடும்போது படுக்கை விரிப்பு கசங்கி களையிழந்து போக நேரிடும். படுக்கை விரிப்பின் ஓரங்களில் எலாஸ்டிக் வைத்து தைத்தால் அது மெத்தையுடன் சரியாகப் பொருந்தி, கசங்காமல் இருக்கும். தையற்கலை தெரிந்தவர்கள் இதையே சுயதொழிலாக செய்து வருமானம் ஈட்டலாம். சுலபமான முறையில் ஒரு சாதாரண படுக்கை விரிப்பை, எவ்வாறு எலாஸ்டிக் பொருத்திய விரிப்பாக மாற்றுவது என இங்கே தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
படுக்கை விரிப்பு துணி - 1
பொருத்தமான கலரில் நூல்கண்டு - 1
அரை அங்குல அகலம் கொண்ட எலாஸ்டிக் - படுக்கை விரிப்பின் அளவுக்கு ஏற்ப
செய்முறை:
மெத்தையின் நீள அகலத்தை அளந்த பிறகு அதற்கேற்ற அளவில் துணி வாங்கிக் கொள்ளுங்கள். ரெடிமேட் படுக்கை விரிப்பு இருந்தால் அதை அப்படியே பயன்படுத்தலாம்.
1. முதலில் படுக்கை விரிப்பைச் சுருக்கங்கள் இல்லாதவாறு தரையில் விரித்து வையுங்கள்.
2. பின்பு அதை மேலிருந்து கீழாக ஒருமுறை மடியுங்கள். பின்னர் இடமிருந்து வலமாக மீண்டும் மடியுங்கள். இப்போது படுக்கை விரிப்பு நான்கு மடிப்பாக இருக்கும்.
3. இந்த நிலையில் படுக்கை விரிப்பின் வலதுபுறம் கீழ்ப் பகுதியில் இருக்கும் மடிப்புகள் வெளியே தெரியும்படி இருக்கும். அவைதான் படுக்கையின் நான்கு பக்கங்களிலும் வரும் விளிம்புகள்.
4. இப்போது படுக்கை விரிப்பின் இந்த ஓரங்களில், ஒரு வளைவு வரைந்து கூடுதலாக இருக்கும் துணியை கத்தரித்து விடுங்கள்.
5. படுக்கை விரிப்பைச் சுற்றிலும் சுமார் ஒரு அங்குல அளவில் மடித்து, தைத்துக் கொள்ளுங்கள். அதில் எலாஸ்டிக்கைக் கோர்ப்பதற்கு ஏற்றவாறு சிறு இடைவெளி விடுங்கள். அதாவது உங்களிடம் இருக்கும் அரை அங்குல அகலம் கொண்ட எலாஸ்டிக்கை உள்ளே நுழைக்கும் அளவுக்கு இடைவெளி இருக்க வேண்டும்.
6. அதற்குள் எலாஸ்டிக்கை நுழைத்து கோர்த்த பிறகு, அதன் இரண்டு முனைகளையும் முடிச்சிட்டுக் கொள்ளுங்கள்.
இப்போது எலாஸ்டிக் விரிப்பு தயார்.
இதை படுக்கையின் மீது விரியுங்கள். அதை சுற்றிலும் தைக்கப்பட்டிருக்கும் எலாஸ்டிக், மெத்தையின் அடிப்பக்கத்தைப் பற்றும்படி செய்யுங்கள். இனி, குழந்தைகள் மெத்தையின் மீது ஏறி விளையாடினாலும் படுக்கை விரிப்பு கசங்காது.
சந்தைப்படுத்தும் வழிகள்:
இந்த எலாஸ்டிக் விரிப்பைப் பற்றிய புகைப்படங்களை உங்கள் தொடர்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய குடியிருப்பில் வசிப்பவர்கள், உறவினர்கள் என தைத்துக் கொடுக்க ஆரம்பித்து, பிறகு தொழில்முறையில் தயாரிக்கத் தொடங்கலாம். வீட்டில் இருந்தபடியே பகுதி நேர தொழிலாக இதை செய்து வருமானம் ஈட்டலாம்.