உணர்வுகளுக்கு குரல் கொடுக்கும் ரவீணா


உணர்வுகளுக்கு குரல் கொடுக்கும் ரவீணா
x
தினத்தந்தி 16 Oct 2022 1:30 AM GMT (Updated: 16 Oct 2022 1:30 AM GMT)

பின்னணிக் குரல் கொடுக்கப்போகும் கதாபாத்திரத்தை நமக்குள் உள்வாங்குவது முக்கியம். திரைப்பட காட்சியின் தன்மைக்கு ஏற்ப ‘டப்பிங்’ பேசுவது அவசியம் என்பதை அம்மா மூலம் உணர்ந்திருக்கிறேன். இயக்குநர் நினைக்கிற உணர்வை குரல் வழியாக கொண்டுவருவதுதான் என் வேலை. அதைச் சரியாக செய்வதில் உறுதியாக இருப்பேன்.

சினிமா உலகில், திரைக்குப் பின்னால் இருந்து பணியாற்றும் கலைஞர்களில் முக்கியமானவர்கள் 'டப்பிங் ஆர்டிஸ்ட் எனப்படும் பின்னணிக் குரல்' கொடுப்பவர்கள். அந்த வரிசையில் கடந்த 10 ஆண்டுகளாக பிரபல கதாநாயகிகளுக்கு பின்னணிக் குரல் கொடுத்து வருகிறார் ரவீணா ரவி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் இவரது குரல் ஒலித்து வருகிறது. அவருடன் ஒரு சந்திப்பு.

"எனது அம்மா ஸ்ரீஜா ரவி டப்பிங் கலைஞர். அவர்தான் என் குரு. தனது 45 வருட அனுபவத்தில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி, 5 மாநில விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவருடன் குழந்தையாக இருக்கும்போதே டப்பிங் ஸ்டூடியோ செல்வேன். 'தொட்டாசிணுங்கி' திரைப்படத்திற்கான வானொலி விளம்பரத்தில் வந்த குழந்தையின் குரல் என்னுடையதுதான். அப்போது எனக்கு 2 வயது. நான் விளையாட்டாக சொல்லிக் கொண்டிருந்தபோது, அதை ஒலிப்பதிவு செய்து விளம்பரமாக்கினார்கள். இவ்வாறு என்னை அறியாமலேயே இத்துறைக்கு வந்துவிட்டேன். அம்மாவின் தாயார் நாராயணியும் டப்பிங் கலைஞராக இருந்தவர். என் அப்பா ரவீந்திரநாதன் நடிகர் மற்றும் பாடகர்.

கதாநாயகிகளுக்கு குரல் கொடுக்கத் தொடங்கியது எப்போது?

'சாட்டை' திரைப்படத்தில் முதன் முதலாக மகிமா நம்பியாருக்கு பின்னணிக் குரல் கொடுத்தேன். அதனைத் தொடர்ந்து எமி ஜாக்சன், அமலாபால், ராசிகண்ணா, மடோனா செபாஸ்டியன், நிக்கி கல்ராணி, கேத்ரின் என பல கதாநாயகிகளுக்கு பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறேன். நயன்தாராவுக்கு மலையாளத்தில் பின்னணி பேசியது மறக்க முடியாதது.

கதாநாயகிகளுக்கு குரல் கொடுக்கத் தொடங்கி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன். இந்த பத்தாண்டுகளில் ஐந்து மொழிகளில் 91 நாயகிகளுக்கு என் குரல் பொருந்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

பின்னணிக் குரல் கொடுப்பதற்கு உங்களை எப்படி தயார் செய்கிறீர்கள்?

பின்னணிக் குரல் கொடுக்கப்போகும் கதாபாத்திரத்தை நமக்குள் உள்வாங்குவது முக்கியம். திரைப்பட காட்சியின் தன்மைக்கு ஏற்ப 'டப்பிங்' பேசுவது அவசியம் என்பதை அம்மா மூலம் உணர்ந்திருக்கிறேன். இயக்குநர் நினைக்கிற உணர்வை குரல் வழியாக கொண்டுவருவதுதான் என் வேலை. அதைச் சரியாக செய்வதில் உறுதியாக இருப்பேன்.

நெருக்கடியான பணிச்சூழல் ஏதாவது ஏற்பட்டிருக்கிறதா?

ஒரு வருடத்துக்கு முன்பு என் அப்பா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மறைந்தார். எனக்கு எல்லா வகையிலும் ஊக்கம் அளித்த அவர் இல்லாதது, என்னை நிலைகுலையச் செய்தது. அவர் மறைந்த ஒரு மாதத்துக்குள் பின்னணிக் குரல் கொடுக்கச் சென்றபோது, என்னால் அதைச் சரியாக செய்ய முடியவில்லை.

மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் இயல்பு நிலைக்குத் திரும்பினேன். 'எனது பணியை நிறைவாகச் செய்வதே, நான் நல்ல நிலைக்கு உயர வேண்டும் என்று பாடுபட்ட அப்பாவின் அன்பிற்கு செலுத்தும் நன்றிக்கடன்' என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன். தற்போது முழு ஈடுபாட்டுடன் பணிகளைத் தொடர்கிறேன்.


Next Story