வீட்டுத் தோட்டத்தை மிளிர வைக்கும் ஒளிவிளக்குகள்


தினத்தந்தி 4 Jun 2023 7:00 AM IST (Updated: 4 Jun 2023 7:00 AM IST)
t-max-icont-min-icon

கடல்வாழ் உயிரினங்களில் மிகவும் அழகானவை ஜெல்லி மீன்கள். அவற்றை போன்ற கட்டமைப்புகளைக் கொண்டு வீட்டின் அறைகளை அழகுபடுத்த முடியும். இதற்கு ‘டில்லான்சியா’ எனும் தாவர வகையைப் பயன்படுத்தலாம்.

வீட்டுத் தோட்டத்தை அழகாக்குவதில் ஒளி தரும் விளக்குகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதற்கென்றே மின்சாரம் மற்றும் சூரிய ஒளியில் இயங்கக்கூடிய பல்புகள் பல்வேறு வகைகளில் கிடைக்கின்றன. ஆனால் பலரும் தோட்டத்தில் பயன்படுத்தும் விளக்குகளுக்கு முக்கியத்துவம் தராமல், அன்றாடம் வீட்டிற்குள் உபயோகிக்கும் மின் விளக்கையோ, ஒளி மங்கிய குண்டு பல்பையோ பொருத்திவிடுகிறார்கள். ஒளி அதிகம் தரும் விளக்குகளால் தோட்டம் 'பளிச்'சென்று காட்சி அளிப்பதுடன், அந்த சூழல் நம்முடைய மனதையும் புத்துணர்ச்சி அடையச் செய்யும்.

வீட்டுத் தோட்டத்தில் பொருத்த எல்.இ.டி விளக்குகளே பலரின் முதல் தேர்வாக இருக்கும். காரணம் அதிக வாழ்நாள் மற்றும் வெளிச்சம், குறைந்த மின்சார நுகர்வு, பல்வேறு வடிவங்களில் மின்விளக்குகள் கிடைப்பது ஆகியவையே. இவற்றை மேற்கூரை இல்லாத அறை வடிவிலான தோட்ட அமைப்புக்குப் பயன்படுத்தலாம்.

முற்றம் மற்றும் சற்று அதிக பரப்பளவு உள்ள வீட்டுத் தோட்டத்துக்கு புளோட் லைட்டுகளை அமைக்கலாம். இவை நீண்ட தூரம் வரை வெளிச்சம் தரக்கூடியவை. அனைத்து பருவ காலங்களுக்கும் நீடித்து இயங்கும் வடிவமைப்பை கொண்டவை.

வீட்டின் உட்பகுதி மற்றும் வெளிப்புறத் தோட்டங்களுக்கு 'வால் லைட்ஸ்'களைப் பயன்படுத்தலாம். இவை தோட்டத்திற்கு தேவையான வெளிச்சத்தைக் கொடுப்பதுடன் அந்த சூழலையும் அழகாக்கும். இவற்றை அடிக்கடி மாற்றியமைக்க வேண்டியதில்லை; ஒருமுறை அமைத்துவிட்டால் போதுமானது. இந்த விளக்குகளில் சென்சார் வசதியும் உள்ளது. வெளியாட்கள் உள்ளே நுழைவது அல்லது வேறு இடையூறு ஏற்படும்போது இவை 'ஒலி' எழுப்பி எச்சரிக்கும்.

'லேண்ட் ஸ்கேப் லைட்டுகள்' பெரும்பாலும் வீட்டுத் தோட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது. இவற்றுக்கென தனி ஸ்டாண்ட் அல்லது கம்புகள் தேவையில்லை. தோட்டத்தில் தரையிலேயே ஒரு சிறிய குழி தோண்டி இவற்றை பொருத்தலாம். பெரும்பாலும் வீட்டுத்தோட்டத்தில் உள்ள குளம், சிறிய அருவி, மரங்கள் மற்றும் பூச்செடிகளின் அழகை மிளிரச் செய்வதற்காக இவ்வகை மின் விளக்குகளை பயன்படுத்துகிறார்கள்.

அறைகளை அழகுபடுத்தும் ஜெல்லி பிஷ் தாவரங்கள்

கடல்வாழ் உயிரினங்களில் மிகவும் அழகானவை ஜெல்லி மீன்கள். அவற்றை போன்ற கட்டமைப்புகளைக் கொண்டு வீட்டின் அறைகளை அழகுபடுத்த முடியும். இதற்கு 'டில்லான்சியா' எனும் தாவர வகையைப் பயன்படுத்தலாம். இது காற்றில் தொங்கவிட்டு வளர்க்கக்கூடிய 'ஏர் பிளாண்ட்ஸ்' வகையைச் சேர்ந்தது.

ஜெல்லி மீன்களின் ஓடுகள் போன்ற தோற்றம் கொண்ட குடுவைகளில், கவிழ்ந்த நிலையில் இந்த தாவரங்களை வைத்து, நிறமற்ற டிரான்ஸ்பரென்ட் கயிற்றைக் கொண்டு அறையின் சுவர்கள் மற்றும் மேற்கூரையில் இணைத்து விடலாம்.

சற்று தூரத்தில் இருந்து பார்க்கும்போது, இவை காற்றில் ஜெல்லி மீன்கள் மிதப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும். இவற்றை நேரடியாக சூரிய ஒளி படும் பகுதிகளில் தொங்க விடக்கூடாது. வாரத்தில் இரண்டு நாட்கள் தண்ணீரை லேசாக ஸ்பிரே செய்தால் போதுமானது.

வெயில் காலங்களில் வாரத்தில் மூன்று நாட்கள் தண்ணீர் தெளிக்க வேண்டும். உப்பு மற்றும் கடினமான தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது. மழைநீர் இவ்வகைத் தாவரங்கள் வளர்வதற்கு ஏற்றது.


Next Story