நீண்ட இடைவெளிக்கு பின்பு வேலைக்கு செல்லும் பெண்களுக்கான ஆலோசனைகள்


நீண்ட இடைவெளிக்கு பின்பு வேலைக்கு செல்லும் பெண்களுக்கான ஆலோசனைகள்
x
தினத்தந்தி 16 July 2023 7:00 AM IST (Updated: 16 July 2023 7:01 AM IST)
t-max-icont-min-icon

நீங்கள் எதிர்பார்க்கும் குறிப்பிட்ட வேலை, சில நேரங்களில் கிடைக்காமல் போகக்கூடும். அதற்காக மனம் தளராமல், அதே துறையைச் சார்ந்த மற்ற வேலைகளுக்கு விண்ணப்பியுங்கள். பகுதி நேர வேலை வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதன் மூலம் கூடுதல் அனுபவம் பெற முடியும்.

பெண்களுக்கென்று தனித்த அடையாளத்தையும், பொருளாதார சுதந்திரத்தையும் அளிப்பது தகுதிக்கேற்ற வேலை. திருமணம், குழந்தை பிறப்பு, உடல்நலம், கணவரின் பணி காரணமாக புதிய ஊருக்கு குடிபெயர்வது உள்ளிட்ட காரணங்களால், பல பெண்கள் தாங்கள் பார்த்து வந்த வேலையில் இருந்து விலகி இருப்பார்கள். சிலருக்கு வருடக்கணக்கில் இடைவெளி ஏற்பட்டு இருக்கக்கூடும். சூழ்நிலைகள் சாதகமாக அமைந்து வரும்போது, 'மீண்டும் வேலைக்குப் போகலாம்' என்று நினைப்பார்கள். ஆனால் அதை 'எப்படி தொடங்குவது' என்ற குழப்பமும், தயக்கமும் அவர்களுக்குத் தடையாக இருக்கும். இத்தகைய தடைகளைத் தகர்த்து முன்னேற சில ஆலோசனைகள்.

முதலில் உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். உங்கள் கல்வித்தகுதி மற்றும் இதற்கு முன்பு நீங்கள் செய்துவந்த வேலையின் மூலம் பெற்ற அனுபவம் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்யுங்கள். அதற்கு ஏற்ற வேலையைத் தேடிக்கொண்டால் போதுமா? அல்லது வேறு துறையில் வேலை தேட வேண்டுமோ? என்று முடிவு செய்யுங்கள்.

உங்களை தொழில்ரீதியாக தயார் செய்யுங்கள். உங்கள் துறை சார்ந்த அறிவை தற்போதைய காலத்திற்கு ஏற்ப மேம்படுத்திக்கொள்ளுங்கள். அதற்கான சான்றிதழ் படிப்புகளைப் படியுங்கள். பயிற்சிகளை பெறுங்கள்.

நீண்ட வருடங்கள் இடைவெளி எடுத்திருந்தால், நீங்கள் பார்த்துக் கொண்டிருந்த வேலையும், அது சார்ந்த துறையும் தற்போது காலாவதியாகி இருக்கலாம். எனவே தற்போது எத்தகைய பணிகளுக்கு அதிக தேவை இருக்கிறது என்று ஆராய்ந்து உங்களுக்கான துறையை தேர்வு செய்யுங்கள்.

உங்களுக்கான துறையை தேர்ந்தெடுத்ததும், நண்பர்கள், உறவினர்கள், அருகில் வசிப்பவர்கள் என அனைவரிடமும் நீங்கள் வேலை தேடுவதைப் பற்றி தெரிவியுங்கள். நம்பகமான வேலைவாய்ப்புத் தளங்களில் தொடர்ந்து தேடுங்கள்.

சுயவிவரக் குறிப்புதான் உங்கள் பிரதிநிதி. எனவே சிறந்த சுயவிவரக் குறிப்பை தயார் செய்து கொள்ளுங்கள். நேர்முகத்தேர்வின் போது நீண்டகாலம் இடைவெளி ஏற்பட்டிருப்பதற்கான காரணம் குறித்து கேள்வி கேட்கையில், அதற்கான, சரியான விளக்கத்தை கூறுங்கள். நீங்கள் கூறும் காரணங்கள் நம்பகத்தன்மையுடன் உண்மையாக இருக்க வேண்டும்.

நீங்கள் எதிர்பார்க்கும் குறிப்பிட்ட வேலை, சில நேரங்களில் கிடைக்காமல் போகக்கூடும். அதற்காக மனம் தளராமல், அதே துறையைச் சார்ந்த மற்ற வேலைகளுக்கு விண்ணப்பியுங்கள். பகுதி நேர வேலை வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதன் மூலம் கூடுதல் அனுபவம் பெற முடியும்.

வேலைக்கு செல்ல ஆரம்பிக்கும்போது, இதுவரை கடைப்பிடித்து வந்த அன்றாட வாழ்க்கை முறையில் சில மாறுதல்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம். அதற்கு ஏற்றவாறு உங்கள் குடும்ப உறுப்பினர்களை தயார் செய்யுங்கள்.

இன்றைய இணைய உலகில் ஆயிரக்கணக்கான வாய்ப்புகள் உள்ளன. அதற்கு ஏற்றவாறு உங்களை மேம்படுத்திக் கொண்டு விடாமுயற்சியுடன் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


Next Story