கமர்சியல் புகைப்படவியலில் கலக்கும் பிரீத்தி
2016-ம் ஆண்டு எனக்கு திருமணம் நடைபெற்றது. அதற்கு அடுத்த ஆண்டில் இருந்தே பயிற்சி வகுப்புகளுக்கு செல்வது, புகைப்படவியல் சார்ந்த வீடியோக்களை பார்ப்பது, நிபுணர்களின் உரைகளை கேட்பது, புகைப்படம் எடுத்துப் பழகுவது என ‘புகைப்படவியல்’ படிப்பிற்கு என்னை தயார்படுத்தத் தொடங்கினேன்.
புகைப்படவியலில் பல பிரிவுகள் உண்டு. வனவிலங்கு, நுண்கலை, பேஷன், பயணம், வாழ்க்கை முறை என இதில் உள்ள பிரிவுகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். அந்த வரிசையில் ஒன்றுதான், நிறுவனங்களின் தயாரிப்புகளை புகைப்படங்கள் எடுப்பது. இதில் ஆண்களே அதிகமாக செயல்பட்டு வரும் நிலையில், திறமையால் தனக்கென தனி இடத்தை உருவாக்கி இருக்கிறார் பிரீத்தி.
உற்பத்தி நிறுவனங்களுக்கான கமர்சியல் புகைப்படக் கலைஞராக செயல்பட்டு வரும் பிரீத்தி, தன்னைப்போல் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு கமர்சியல் புகைப்படவியல் குறித்து பயிற்சியும் அளித்து வருகிறார். "2018-ம் ஆண்டு என் மகள் பிறந்தாள். அவளை புகைப்படம் எடுப்பதற்காகவும், வீட்டில் விசேஷங்கள் நடக்கும்போது அந்தத் தருணங்களைப் பதிவு செய்வதற்காகவும் கேமரா வாங்கினேன். இப்போது அதுவே தொழிலாக மாறியதில் இரட்டிப்பு மகிழ்ச்சி" எனக்கூறும் பிரீத்தி நம்மிடம் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
"மதுரை எனது சொந்த ஊர். இளநிலை பி.எஸ்சி., தகவல் தொழில்நுட்பம் மற்றும் எம்.பி.ஏ., படித்திருக்கிறேன். தற்போது குஜராத் மாநிலம் சூரத் நகரத்தில் வசித்து வருகிறேன். சோப்பு, ஷாம்பு, மருந்துகள், உணவு பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கான கமர்சியல் புகைப்படக் கலைஞராக செயல்பட்டு வருகிறேன். மேலும் குழந்தைகள் புகைப்படக் கலைஞராகவும் இருக்கிறேன்" என்றார்.
புகைப்படவியல் துறையைத் தேர்ந்தெடுக்க காரணம் என்ன என்று கேட்டபோது, "சிறுவயதில் புகைப்படவியல் மீது அதிக ஆர்வம் இல்லை. இளநிலை பட்டப்படிப்பு படிக்கும்போது தான் அதில் ஈடுபாடு ஏற்பட்டது. பட்ட மேற்படிப்பில் அடுத்ததாக என்ன படிக்கலாம் என யோசித்தபோது, பிடித்த துறையான புகைப்படவியல் படிக்க நினைத்தேன். முதுகலை எம்.பி.ஏ., படிப்பதற்கு பதிலாக மாஸ்டர்ஸ் இன் போட்டோகிராபி படிப்பதற்கு முயற்சிகள் எடுத்தேன்.
2016-ம் ஆண்டு எனக்கு திருமணம் நடைபெற்றது. அதற்கு அடுத்த ஆண்டில் இருந்தே பயிற்சி வகுப்புகளுக்கு செல்வது, புகைப்படவியல் சார்ந்த வீடியோக்களை பார்ப்பது, நிபுணர்களின் உரைகளை கேட்பது, புகைப்படம் எடுத்துப் பழகுவது என 'புகைப்படவியல்' படிப்பிற்கு என்னை தயார்படுத்தத் தொடங்கினேன்.
இந்தியாவின் முதன்மை கல்வி நிறுவனங்களில் ஒன்றில் இருந்த 15 இடங்களுக்கு நானும் விண்ணப்பித்தேன். ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை" என்று கூறும் பிரீத்தி, தான் புகைப்படவியல் துறையில் சுய தொழில் முனைவோர் ஆன விதத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
"கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறைய பேர் வேலை இழந்தனர். ஆனால், எனக்கு முதல் வாய்ப்பு ஊரடங்கு காலத்தில்தான் கிடைத்தது. பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக வெளியே போட்டோ ஷூட் நடத்த முடியவில்லை. அந்த நேரங்களில் நான் வீட்டில் இருக்கும் சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட சாதாரணப் பொருட்களை, சிறப்பாக காட்சிப்படுத்தி புகைப்படம் எடுத்து வந்தேன். அதற்கு அதிக மெனக்கெடல்கள் தேவைப்பட்டது. நான் முதுகலை புகைப்படவியல் படிப்பதற்காக முயற்சிகள் செய்தபோது எடுத்த பயிற்சிகள் அப்போது கைகொடுத்தன.
அவ்வாறு 10 பொருட்களை வைத்து, சிறந்த புகைப்படங்களை எடுத்து எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் அடங்கிய வாட்ஸ் ஆப் குழுவில் பதிவிட்டேன்.
அதை பார்த்த சில பெண் தொழில் முனைவோர்கள், தங்களின் தயாரிப்பு பொருட்களை விளம்பரம் செய்வதற்கான கமர்சியல் புகைப்படக் கலைஞராக எனக்கு வாய்ப்பு அளித்தார்கள். நானும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டேன். தரமான புகைப்படங்களை எடுத்தேன். சில நிறுவனங்களுக்கு நான் எடுத்த புகைப்படங்கள் பிடித்திருந்ததால், அவர்களுடைய அடுத்தடுத்த தயாரிப்புகளுக்கான கமர்சியல் புகைப்படக்கலைஞராக எனக்கு வாய்ப்பளித்தார்கள்.
ஒரு தாயாக எனது குழந்தையையும் கவனிக்க வேண்டும். அதே சமயம் தொழிலையும் பார்க்க வேண்டும் என்ற காரணத்தால், வீட்டிலேயே சிறிய அளவிலான ஸ்டூடியோ செட் அப் வைத்திருக்கிறேன். வீட்டில் இருந்தபடியே நிறுவனங்களுக்கு ஷூட் நடத்தி வருகிறேன்" என்று கூறும் பிரீத்தி, புகைப்படவியல் துறையில் ஆர்வம் உள்ள பெண்களுக்கு பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறார்.
கடந்த 2020-ம் ஆண்டு 300 பெண் உறுப்பினர்களை கொண்ட 'ஐ லவ் போட்டோகிராபி' என்ற முகநூல் பக்கத்தை உருவாக்கினேன். தற்போது படைப்பாற்றல் இருந்தும் பயிற்சி தேவைப்படுவோருக்கு பயிற்சி வகுப்புகள் நடத்துவது, ஒருங்கிணைப்பது, புகைப்பட போட்டிகள் நடத்துவது என செயல்பட்டு வருகிறேன்.
சிலருக்கு இலவசமாகவும் கற்றுக்கொடுக்கிறேன். இதன் மூலம் போட்டோகிராபி கற்று தற்போது 10 பெண்கள், வீடுகளில் சிறிய ஸ்டூடியோ செட் அப் வைத்து கமர்சியல் புகைப்படக் கலைஞராக சுய தொழில் செய்து வருகின்றனர்" என்ற பிரீத்தியிடம், அவர் வாங்கிய விருதுகள் பற்றி கேட்டோம்.
"மும்பையைச் சேர்ந்த கலை கல்விக்கான தேசிய அகாடமி, இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட பெண்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
அந்தவகையில் கலைப் பிரிவில், போட்டோகிராபி துறையில் பெண்கள் குறைவாக இருப்பதாலும், மேலும் பல பெண்களுக்கு பயிற்சிகள் கிடைக்கச் செய்து தொழில் முனைவோர்களாக உருவாக்க பங்களிப்பு செய்வதாலும், 2021-ம் ஆண்டுக்கான 'சிறந்த பெண் விருது' எனக்கு கிடைத்தது" என்றார். அவரிடம், பெண்கள் இந்த துறையில் குறைவாக இருப்பதற்கு காரணம் குறித்துக் கேட்டோம்.
"புகைப்படவியலை பெண்கள் தொழிலாக செய்வதை வீட்டில் இருப்பவர்கள் விரும்புவதில்லை.
எங்கள் முகநூல் குழுவில் இருக்கும் பலர் வீட்டிற்கு தெரியாமல்தான் புகைப்படவியல் கற்று வருகிறார்கள். பெண்களால் எதையும் செய்ய முடியும் என சமூகம் உணர வேண்டும். என் கணவர் மற்றும் பெற்றோர் எனக்கு உறுதுணையாக இருப்பதால்தான் என்னால் வெற்றிகரமாக செயல்பட முடிகிறது" என்றார் பிரீத்தி நிறைவாக.