சத்து மாவு தயாரித்து தொழில் முனைவரான நந்தினி!


சத்து மாவு தயாரித்து தொழில் முனைவரான நந்தினி!
x
தினத்தந்தி 18 Sept 2022 7:00 AM IST (Updated: 18 Sept 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

சத்து மாவை புட்டு போல நீராவியில் வேக வைத்து, அத்துடன் நெய், தேங்காய்ப்பூ, நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து உருண்டையாக தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை மாலை நேர சிற்றுண்டியாக அனைவரும் சாப்பிடலாம்.

பொருளாதாரத் தேவை மற்றும் தங்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்ற காரணங்களால், பெண்கள் வேலைக்கு செல்லவும், தொழில் தொடங்கவும் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வரிசையில் சத்து மாவு தயாரிப்பில் இறங்கி அசத்தி வருகிறார் நெய்வேலியைச் சேர்ந்த நந்தினி குணசேகரன்.

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக பலரும் விரும்பி சாப்பிடும் சத்து மாவை, இயற்கையான முறையில் தயாரிக்கிறார். தமிழ்நாடு மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களுக்கும், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும் அதனை விற்பனை செய்து வருகிறார். சிறிய முதலீட்டில் ஆரம்பித்த இவரது தொழில், தற்போது வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அவரது பேட்டி…

"தஞ்சை மாவட்டம் திருவையாறில் உள்ள கல்லூரியில் இசை பயின்று, 'ஏழிசை மணி' எனும் பட்டம் பெற்றேன். குடும்பப் பொறுப்புகள் அதிகமாக இருந்த நிலையிலும், வீட்டில் இருந்தபடியே நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்தேன். இப்போது சத்து மாவு தயாரிப்பில் ஈடுபடுகிறேன்" என்றவரிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்.

சத்து மாவு தயாரிக்கும் எண்ணம் எப்படி வந்தது?

எனது சிறு வயதில் அம்மா, எங்களுக்கு சத்து மாவில் கஞ்சி மற்றும் உருண்டை தயாரித்துக் கொடுப்பார். அதுதான் எங்களுக்கு ஊட்டச்சத்து உணவாக இருந்தது. திருமணத்துக்குப் பின்பு, நானே தேவையான பொருட்கள் வாங்கி சத்து மாவு தயாரித்து பயன்படுத்தினேன்.


சத்து மாவு விற்பனையில் ஈடுபட்டது எப்படி?

நான் தயாரித்த சத்து மாவை குடும்பத்தின் தேவைக்குப் பயன்படுத்தியது மட்டுமில்லாமல், வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும் கொடுத்து வந்தேன். அவர்கள் 'இது உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு, ருசியாகவும் இருக்கிறது' என்றனர். ஒருசிலர் என்னிடம், சத்து மாவு தயாரிப்பதற்கான செய்முறையைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அவர்களே செய்து கொண்டார்கள். ஆனால் பலர், 'எங்களுக்கு நேரம் இல்லை. ஆகவே நீங்கள் சத்து மாவு தயாரித்துக் கொடுக்க முடியுமா?' என்று கேட்டனர். அதனால், வீட்டிலேயே சத்து மாவு தயாரித்து, உறவினர், நண்பர்கள் எனக் கேட்பவர்களுக்குக் கொடுக்க ஆரம்பித்தேன்.

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை, நம்மைச் சுற்றி எளிதாகக் கிடைக்கும் தானியங்களைக் கொண்டே பெறலாம். இந்த அடிப்படையில்தான் சத்துமாவினைத் தயாரிக்கிறேன். இயற்கையான முறையில், மரபணு மாற்றம் செய்யப்படாத தானியங்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால் உடலுக்கு ஆரோக்கியமானது. ஆரம்பத்தில் எனது தயாரிப்புக்கு பெயர் எதுவும் வைக்கவில்லை. பிறகு, மருத்துவரான என் கணவர் குணசேகரன் ஆலோசனைப் படி, உரிய அரசு அங்கீகாரம் பெற்று தயாரித்து வருகிறேன்.

இந்த சத்து மாவை பயன்படுத்தி, அதன் பலனை அனுபவித்து உணர்ந்தவர்கள், தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு பரிந்துரைக்கிறார்கள். அவ்வாறு கிடைத்த வரவேற்பை அடுத்து, ஆர்கானிக் முறையில் சாம்பார் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் போன்ற சமையலுக்குத் தேவையான மசாலாப் பொருட்களையும் தயாரிக்க ஆரம்பித்துவிட்டேன்.

நான் சுயதொழில் தொடங்க என் கணவர் ஊக்கம் கொடுத்ததோடு, உதவியாகவும் இருக்கிறார். மூலப் பொருட்களை வெயிலில் காய வைத்து, சுத்தம் செய்து, வறுத்து, பொடிப்பது போன்ற பணிகளுக்கு உதவியாக சில பெண்கள் உள்ளனர்.

வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். தெரியாத அல்லது பெரிய பட்ஜெட் தொழில்களில் ஈடுபடாதீர்கள். உங்களுக்குத் தெரிந்த விஷயங்கள் நிறைய இருக்கும். அதில் ஈடுபடுங்கள். தரத்தில் குறை வைக்காதீர்கள். இந்த மூன்று விஷயங்களைக் கடைப்பிடித்தால் நீங்களும் வெற்றிகரமான தொழில் முனைவோர்தான்.

சத்து மாவு தயாரிப்பதன் செய்முறை குறிப்பைச் சொல்ல முடியுமா?

கோதுமை - 300 கிராம், கேழ்வரகு - 500 கிராம், வெள்ளைச் சோளம் - 100 கிராம், நாட்டுக் கம்பு - 100 கிராம், பச்சைப் பயறு - 100 கிராம், பொட்டுக்கடலை - 50 கிராம், ஜவ்வரிசி - 50 கிராம், மாப்பிள்ளை சம்பா அரிசி 100 கிராம், முந்திரி 10, பாதாம் 10, ஏலக்காய் 7. இவை எல்லாவற்றையும் மிதமான தீயில் வறுத்து எடுத்து, ஆறவைத்து அரவை இயந்திரத்தில் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இது ஆறு மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இதில் செயற்கையான நிறங் களோ, ரசாயனங்களோ சேர்க்கக்கூடாது.

காலை, மாலை இருவேளையும், இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து காய்ச்சிய பாலில் கலந்து குடிக்கலாம். இனிப்புக்காக வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சிறிது சேர்த்துக்கொள்ளலாம். பால் விரும்பாதவர்கள் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்தும் சாப்பிடலாம். இதனுடன் சிறிது மோர் மற்றும் தேவைக்கேற்ப உப்பு கலந்தும் சாப்பிடலாம். காலை நடைபயிற்சிக்குச் செல்வதற்கு முன் பருகிவிட்டு சென்றால் உடலில் களைப்பு ஏற்படாது.

சத்து மாவு உருண்டை செய்வது எப்படி?

சத்து மாவை புட்டு போல நீராவியில் வேக வைத்து, அத்துடன் நெய், தேங்காய்ப்பூ, நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து உருண்டையாக தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை மாலை நேர சிற்றுண்டியாக அனைவரும் சாப்பிடலாம்.


Next Story