தாயான பிறகும் சாதிக்க முடியும் - ஜெனிஷா


தொடர் உழைப்பால், பல தையல் கலைஞர்களை பணியமர்த்தி, இதுவரை உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள 600-க்கும் மேற்பட்டோருக்கு ஆடை வடிவமைப்பு செய்து கொடுத்திருக்கிறேன். அதற்காகப் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறேன்.

"தனது பாதையில் இருக்கும் தடைகளைத் தகர்த்தெறிந்து சாதிக்கும் ஆற்றல் ஒவ்வொரு பெண்ணுக்கும் உண்டு. தங்கள் மீது எறியப்படும் கற்களைக் கொண்டே அழகான கோட்டையைக் கட்டும் திறன் பெற்றவர்கள் பெண்கள்" என்கிறார் ஜெனிஷா ஷேரன் ஜா.திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயான பிறகும், தொழில் முனைவோராகவும், மாடலாகவும் வெற்றி பெற்றுள்ள இவர், 'மிஸஸ் இந்தியா 2021' பட்டத்தை வென்றிருப்பதோடு, சிறந்த பேச்சாளராகவும் திகழ்கிறார். அவருடன் ஒரு சந்திப்பு.

உங்களைப் பற்றி?

நான் பிறந்ததும், வசிப்பதும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்தான். தந்தை ஜெகதீஷ் தொழிலதிபர். தாய் ஷீலா ஓய்வுபெற்ற முதுநிலை ஆசிரியர். நான், தகவல் தொழில்நுட்பத்தில் இளநிலைக் கல்வியும், சர்வதேச வணிகத்தில் முதுநிலைக் கல்வியும், அழகுக்கலை, பேஷன் டிசைனிங், ஏர்லைன், பேஷன் ஸ்டைலிங் ஆகியவற்றில் பட்டயப் படிப்புகளையும் முடித்திருக்கிறேன். தற்போது பி.எச்.டி படித்துக் கொண்டிருக்கிறேன். கிரியேட்டிவ் டிசைனராகவும், மாடலாகவும், தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும் பணியாற்றுகிறேன். எனது மகன் ஜென்லின் இரண்டாம் வகுப்பு படிக்கிறான்.

நீங்கள் ஆடை வடிவமைப்பாளராக மாறியது எப்படி?

பெற்றோர் விருப்பத்திற்காகவே பொறியியல் படித்தேன். 80 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றாலும், அந்தத் துறையில் எனக்கு ஈடுபாடு உண்டாகவில்லை. அதன்பிறகே எனக்கு விருப்பமானவற்றைப் படித்து, பிடித்த துறைகளில் பயணிக்க ஆரம்பித்தேன்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, எனது ஒரு வயது குழந்தையைக் கவனித்துக்கொண்டே, ஆடைகளை வடிவமைத்தேன். நான்கைந்து வகை ஆடைகளை மட்டுமே வைத்து, முகநூலில் எனது ஆடை விற்பனையகத்தை தொடங்கினேன். குழந்தையை கவனித்துக்கொள்ளும் நேரம் தவிர, மற்ற நேரம் முழுவதும் ஆடை வடிவமைப்பில் அர்ப்பணிப்போடு பணியாற்றினேன். அதன் காரணமாக, இரண்டு ஆண்டுகளில் வாடிக்கையாளர்கள் அதிகரித்தார்கள். பிறகு ஒரு தையல் கலைஞரை மட்டும் பணியமர்த்தி எனது அலுவலகத்தைத் தொடங்கினேன்.

தொடர் உழைப்பால், பல தையல் கலைஞர்களை பணியமர்த்தி, இதுவரை உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள 600-க்கும் மேற்பட்டோருக்கு ஆடை வடிவமைப்பு செய்து கொடுத்திருக்கிறேன். அதற்காகப் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறேன்.

ஆரம்பத்தில் எதுவுமே தெரியாமல், நம்பிக்கையை மட்டுமே வைத்து தொழில் தொடங்கினேன். நிறைய தவறுகள் செய்து திருத்திக்கொண்டேன். எனக்கு பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது இந்தத் தொழில்தான்.

ஆன்லைன் டிசைன் ஸ்டூடியோவில் வாடிக்கையாளரின் கற்பனையில் தோன்றும் உடைகளை உருவாக்கித் தருகிறோம். வாடிக்கையாளருக்கு விருப்பமான வடிவத்தில் வரைந்த உடையின் மாதிரியையும், அதை வடிவமைப்பதற்கு ஏற்ற துணியின் மாதிரியையும் அனுப்புவோம். அதை அவர்கள் அங்கீகரித்த பிறகு, அவர்களின் கற்பனையில் கண்ட ஆடையை உருவாக்கித் தருவோம். சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், எங்கள் வலைத்தளம் மூலமாகவும் ஆன்லைனிலேயே ஆர்டர்களை பெற்று, ஆடை வடிவமைப்பு செய்து தருகிறேன். ஒவ்வொரு படிநிலையிலும் வீடியோ கால் மூலம் வாடிக்கையாளருக்கு காண்பித்து, அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிறோம். இதுவே எனது வெற்றிக்குக் காரணம்.

மிஸஸ் இந்தியா 2021 பட்டம் வென்றது எப்படி?

எனது கனவு நிஜமான தருணம் அது. அவ்வளவு எளிதில் அந்தப் பட்டம் எனக்குக் கிடைத்துவிடவில்லை. முதலில் இரண்டு முறை பட்டம் கிடைக்காமல் திரும்பினேன். அதன்பிறகு உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்து உடலையும், மனதையும் தயார் படுத்திக்கொண்டேன். பேச்சுப் பயிற்சியின் மூலம் நன்றாகப் பேசுவதற்குப் பழகிக்கொண்டேன். இதுவே எனது கடைசி முயற்சி என்று கடினமாக உழைத்தேன்.

போட்டியில் கலந்துகொள்வதற்கு தேவைப்படும் எனக்கான உடைகளை, நானே தயாரித்து எடுத்துக்கொண்டு, தன்னந்தனியாக சென்னைக்கு வந்து போட்டியில் கலந்துகொண்டேன். அந்தப் போட்டியில் மிஸஸ் இந்தியா 2021, மிஸஸ் கேட் வாக் 2021, மிஸஸ் பேஷன் ஐகான் 2021 ஆகிய மூன்று பட்டங்களை நான் வென்றேன்.

மாடலாக ஆனது எப்படி?

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எதிர்பாராத விதமாகத்தான் மாடலிங் துறைக்குள் வந்தேன். மாடலிங் துறையில் உள்ளவர்களுக்காக ஆடைகளை வடிவமைத்தேன். அந்த உடைகளை நான் அணிந்து காட்டியபோது, "நீங்களே மாடல் போலத்தான் இருக்கிறீர்கள். நீங்கள் மாடலிங் செய்யலாமே" என்றார் அங்கிருந்த புகைப்படக் கலைஞர்.

அதன்பிறகு ஒருமுறை, மாடலிங் செய்ய வேண்டிய பெண் வராததால், நானே மாடலாகப் பணியாற்றி புகைப்பட ஆல்பம் தயாரித்து வெளியிட்டோம். அதைப் பார்த்து நிறைய பேர் பாராட்டி ஊக்கப்படுத்தினார்கள். 2019-ம் ஆண்டு பல பிரபலங்கள் முன்பாக சென்னையில் நடந்த பேஷன் ஷோவில் பங்கேற்றேன். அப்போது கிடைத்த வரவேற்பால், இத்துறையில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்து பட்டங்களைப் பெற்றேன். கடந்த மூன்று ஆண்டுகளில் நிறைய மாடலிங் செய்திருக்கிறேன். இதன் மூலமாக தற்போது நடிப்பதற்கான வாய்ப்புகளும் வருகின்றன. பாடல்கள், குறும்படங்கள் மற்றும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறேன்.

ஒரே நேரத்தில் பல துறைகளில் சாதிப்பது பற்றி சொல்லுங்கள்?

அர்ப்பணிப்பும், ஈடுபாடும் கொண்ட கடின உழைப்பு மட்டுமே அதற்குக் காரணம். எனக்குக் கிடைத்த சிறிய வாய்ப்புகளையும் நழுவவிடாமல் ஆக்கப் பூர்வமாக பயன்படுத்திக்கொண்டேன்.

திருமணத்துக்குப் பிறகும் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு உங்களின் ஆலோசனை?

ஆண்களைப் போலவே, பெண்களும் சொந்தக் காலில் நின்று திறமைகளை வெளிப்படுத்தி, தங்கள் அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டும். திருமணம், குழந்தைப்பேறு போன்றவை வாழ்வின் படிநிலைகள். அவற்றைக் காரணமாகக் கொண்டு தங்கள் முன்னேற்றத்தை தவிர்க்கக் கூடாது. தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

உங்களுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரங்கள் என்ன?

சிறந்த தொழில் முனைவோருக்கான விருதை இரண்டு முறை பெற்றிருக்கிறேன். த ரியல் சூப்பர் வுமன், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த மாடல், வணிக சாதனையாளர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும், மிஸ் குயின் பேசியோ 2020 உள்ளிட்ட பல பட்டங்களையும் வென்றிருக்கிறேன். 30-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருக்கிறேன்.

உங்கள் எதிர்கால திட்டம் என்ன?

எனக்குப் பிடித்த துறைகளில் பெரிதாக சாதிக்க வேண்டும். மாடலிங் துறையில் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு பல திட்டங்கள் மனதில் உள்ளன.


Next Story