'ஸ்பெஷல் எபெக்ட்' மேக்கப் போடுவதில் அசத்தும் பெர்சி


ஸ்பெஷல் எபெக்ட் மேக்கப் போடுவதில் அசத்தும் பெர்சி
x
தினத்தந்தி 16 July 2023 7:00 AM IST (Updated: 16 July 2023 7:00 AM IST)
t-max-icont-min-icon

பேய் போன்ற தோற்றம் உருவாக்க தலைமுடி, கண்கள், பற்கள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு ஸ்பெஷல் எபெக்ட் மேக்கப் போடுவது கடினமானது. அவர்களின் புகைப்படத்தை அடிப்படையாக வைத்து மோல்டிங் உருவாக்க வேண்டும்.

மேக்கப் மூலம் ஒருவரின் தோற்றத்தை அழகாக மட்டுமில்லாமல், பார்ப்பவர்களை பயமுறுத்தும் வகையிலும் மாற்ற முடியும். அந்த வகையில் தனது ஸ்பெஷல் எபெக்ட் மேக்கப் மூலமாக வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி வருகிறார் கரூரைச் சேர்ந்த பெர்சி அலெக்ஸ்.

விபத்தால் ஏற்படும் காயங்கள், உடைந்துபோன விரல்கள், இறந்தவர் உடல், முதுமையான தோற்றம் ஆகியவற்றை மேக்கப் மூலம் தத்ரூபமாக உருவாக்குகிறார். மக்களை பயமுறுத்தும் பேய் கதாபாத்திரங்களை ஸ்பெஷல் எபெக்ட் மேக்கப் மூலமாக உருவாக்குவதிலும் கைத்தேர்ந்தவராக திகழ்கிறார்.

இது பற்றி அவர் கூறுகையில்,

"எனக்கு சிறுவயதில் இருந்தே மேக்கப் கலையின் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு செல்லும் போதெல்லாம் பெண்கள், குழந்தைகளுக்கு அலங்காரம் செய்வேன்.

ஆனால், எனது பெற்றோர் தையற்கலையை கற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள். அதனால் தையல் வகுப்பில் சேர்ந்து படித்துக்கொண்டிருந்தேன்.

எங்கள் பயிற்சிக்கூடத்துக்கு எதிரில் ஒரு அழகு நிலையம் இயங்கி வந்தது. அதன் மேலாளராக பணிபுரிந்த பெண், ஒருநாள் எனது கையில் நான் வரைந்து இருந்த மெஹந்தியைப் பார்த்து பாராட்டினார். அவருடைய வழிகாட்டுதலால்தான் அழகுக்கலை படித்து, பலவிதமான நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்தேன்.

பின்னர் அழகு நிலையம் தொடங்குவதற்காக சென்னைக்கு வந்தேன். அங்கு தெருவுக்குத் தெரு அழகு நிலையம் இருந்தது. அப்போதுதான் 'நாம் ஏன் ஸ்பெஷல் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆகக்கூடாது' என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. பல்வேறு முயற்சிகளுக்குப் பின்பு அதையும் கற்றுக் கொண்டேன். என்னுடைய திறமையால் தமிழ் திரையுலகில் பல்வேறு வாய்ப்புகளை பெற்று வருகிறேன்.

ஒரு இயக்குநர் கையில் பிளேடால் கிழித்திருப்பது போன்று மேக்கப் மூலம் உருவாக்கிக் காட்ட வேண்டும் என்று கூறினார். அதற்காக 20-க்கும் மேற்பட்ட மேக்கப்புகள் போட்டுக் காண்பித்தும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. பின்னர் ஒரு பிளேடை எடுத்து என் கைகளை கீறிக்கொண்டு அதேபோல மேக்கப் போட்டுக் காட்டினேன். 'அது மிகவும் தத்ரூபமாக இருக்கிறது' என்று அந்த இயக்குனர் பாராட்டினார்.

பேய் போன்ற தோற்றம் உருவாக்க தலைமுடி, கண்கள், பற்கள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு ஸ்பெஷல் எபெக்ட் மேக்கப் போடுவது கடினமானது. அவர்களின் புகைப்படத்தை அடிப்படையாக வைத்து மோல்டிங் உருவாக்க வேண்டும்.

ஸ்பெஷல் எபெக்ட் மேக்கப்பில், எனது ஆர்வத்தைப் பார்த்த என்னுடைய கணவர் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார். எந்த வகையான மேக்கப்பாக இருந்தாலும் அவருக்குத்தான் முதலில் போட்டு பார்ப்பேன். அதன் மூலம் நிறை குறைகளை தெரிந்து கொண்டு சரிசெய்து கொள்வேன்.

ஸ்பெஷல் எபெக்ட் மேக்கப் மூலமாக தமிழ் திரையுலகில் நிறைய சாதிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். தரமான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களுக்கு என்னுடைய ஸ்பெஷல் மேக்கப் மிகவும் உதவியாக இருக்கும்'' என்றார் நம்பிக்கையுடன்.


Next Story