மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை இளவரசி


மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை இளவரசி
x
தினத்தந்தி 4 Sept 2022 7:00 AM IST (Updated: 4 Sept 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

திறன் சார்ந்த போட்டிகள் நடத்துதல், துளிர் இதழ், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்பு, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் ஆகியவற்றுக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறேன்.

ரசுப் பள்ளி மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக களப்பயிற்சி, அறிவியல் கண்காட்சியில் பங்கேற்கச் செய்வது, உணவுத் திருவிழா நடத்துவது, வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவது என பல்வேறு வகைகளில் செயலாற்றி வருகிறார் ஆசிரியை இளவரசி.

திண்டுக்கல் மாவட்டம், உக்குவார்பட்டியைச் சேர்ந்த இவர் அறிவியலில் முதுகலைப்பட்டமும், முதுகலை கல்வியியல் பட்டமும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். தனியார் பள்ளியில் 8 ஆண்டுகள் பணியாற்றிய பின்பு, கடந்த 15 ஆண்டுகளாக அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் முனைவர் தொண்டிமுத்து தனியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவருடன் நடந்த சந்திப்பு…

"ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக பணி செய்த நான், முதுகலை ஆசிரியையாகப் பதவி உயர்வு பெற்று கடந்த நான்கு மாதங்களாக, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வருகிறேன்.

அரசுப்பள்ளி மாணவர்களை மேம்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சிகள் என்ன?

செயல்வழிக் கல்வி, மாற்றுத்திறன் குழந்தைகள் மீது தனிக்கவனம், வளரிளம் பருவத்துக் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு மற்றும் மண்புழு உரம், பஞ்சகவ்யம் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கிறேன். சொந்த செலவிலும், சில எழுத்தாளர்களின் பங்களிப்புடனும் பள்ளி நூலகத்துக்கு மட்டுமின்றி, மாணவர்களுக்கும் புத்தகங்களை வழங்கி வருகிறேன். மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதோடு, புத்தக மதிப்புரை எழுதவும், கதைகளுக்கு ஓவியங்கள் வரையவும் பயிற்சியளிக்கிறேன்.

திறன் சார்ந்த போட்டிகள் நடத்துதல், துளிர் இதழ், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்பு, ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் ஆகியவற்றுக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறேன்.

உங்கள் சாதனைகள் என்று எதைக் கூறுவீர்கள்?

கடந்த பத்து ஆண்டுகளாக, பத்தாம் வகுப்புத் தேர்வில் எனது வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். உணவுத் திருவிழாவை மாவட்ட அளவில் நடத்துவதற்கு அடித்தளமிட்டேன். அரசின் சார்பில் நடத்தப்படும் புத்தாக்க அறிவியல் கண்காட்சியில் 'அங்கக வேளாண்மை' என்ற தலைப்பில் எனது மாணவனும், நானும் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் வெற்றி பெற்று தென்னிந்திய அளவிலான போட்டியிலும் பங்கேற்றோம். அதற்காக 'இன்ஸ்பயரிங் விருது' பெற்றிருக்கிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் மாவட்டக் கல்வித்துறை சார்பில் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றிருக்கிறேன்.

நீங்கள் நடத்திய உணவுத் திருவிழா பற்றிச் சொல்லுங்கள்?

சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில், மாணவர்கள் மூலம் எங்கள் பள்ளியில் 'உணவுத் திருவிழா'வை நடத்தினேன். மாணவர்கள் தாங்களே சமைத்த உணவுகளைக் காட்சிப் படுத்தினார்கள். அது பெரும் வரவேற்பைப் பெற்றதால் பிறகு மாவட்ட அளவிலும் உணவுத் திருவிழாவை நடத்தினார்கள்.

ஆசிரியையாக உங்களது அடுத்த செயல்பாடு என்ன?

அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தைப் பற்றிய மக்களின் கருத்தை மாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கம். அதை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன்.


Next Story