கருமுட்டை வளர்ச்சியின்மைக்கான காரணங்களும், தீர்வும்


கருமுட்டை வளர்ச்சியின்மைக்கான காரணங்களும், தீர்வும்
x
தினத்தந்தி 2 April 2023 7:00 AM IST (Updated: 2 April 2023 7:00 AM IST)
t-max-icont-min-icon

கருமுட்டை சீரான வளர்ச்சி அடைவதற்கு, உடலில் போலிக் அமிலம் மற்றும் இரும்புச் சத்து ஆகியவை போதுமான அளவு இருக்க வேண்டும். அதற்கு பச்சை நிற காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மாதவிடாய் கோளாறுகள், கருமுட்டை வளர்ச்சியின்மை போன்ற பிரச்சினைகள் பெண்களை அதிகமாக பாதிக்கின்றன. இதனால் திருமணமான பல பெண்கள் கருத்தரிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். கருமுட்டை சரியாக வளராமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கான காரணம் மற்றும் தீர்வு குறித்து விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு நல மருத்துவர் மீனா.

நீர்க்கட்டிகள், எண்டோமெட்ரியோசிஸ், கருப்பை கட்டிகள், கருப்பை செயல் இழத்தல் போன்றவையே கருமுட்டை சரியாக வளராமல் இருப்பதற்கு காரணங்களாகும். வாழ்வியல் மாற்றங்களும், அதனால் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையுமே இதற்கான காரணிகள்.

உடல் பருமன், ஊட்டச்சத்து குறைபாடு, உடற்பயிற்சி செய்யாதது, துரித உணவுகள் உண்பது போன்றவற்றால் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களே, பின்னாளில் இத்தகைய பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. இது தவிர உடல் சார்ந்த மரபு சிக்கல்களும், அதிக மாத்திரைகள் உட்கொள்வது அல்லது ரேடியோதெரபி போன்ற தீவிர சிகிச்சைகள் எடுத்துக் கொண்டோருக்கு ஏற்படும் உடலியல் மாற்றங்களும் கருமுட்டை வளர்ச்சியின்மைக்கு காரணமாகலாம்.

தீர்வுகள்:

கருமுட்டை சீரான வளர்ச்சி அடைவதற்கு, உடலில் போலிக் அமிலம் மற்றும் இரும்புச் சத்து ஆகியவை போதுமான அளவு இருக்க வேண்டும். அதற்கு பச்சை நிற காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு முட்டைகோஸ், பிராக்கோலி, அன்னாசிப்பழம், மாதுளை போன்றவற்றை தாராளமாக சாப்பிடலாம்.

பெண்களின் கருமுட்டை உற்பத்திக்கு தேவைப்படும் சத்துக்களில் முதன்மையானது 'வைட்டமின் டி'. கருப்பை கோளாறுகள் வருவதற்கான காரணங்களில் 65 முதல் 85 சதவீதம் வரை வைட்டமின் டி குறைபாட்டால் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வைட்டமின் டி மூலம், வளர்சிதை மாற்றம் அதிகரித்து மாதவிடாய் பிரச்சினைகள் தடுக்கப்படும்.

அன்றாடம் உடற்பயிற்சி செய்வது அவசியம். தினமும் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது நல்லது.

கருமுட்டை சரியான வளர்ச்சி பெறாததற்கு, வயதுக்கேற்ப காரணிகள் இருக்கும். ஆகவே அந்தந்த வயதினருக்கு தகுந்தாற்போல சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனையுடன் கூடிய உடற்பயிற்சி மற்றும் உணவுமுறை மாற்றம் முக்கியமானது.

மாதவிடாய் கோளாறுகள் இருப்பதே, கருமுட்டை சரியான வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கான அறிகுறிதான். ஆகவே மாதவிடாய் பிரச்சினைகள் மூன்று மாதங்களுக்கு மேல் நீடித்தால் கட்டாயம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

மாதவிடாய் பிரச்சினைகளுடன், இரவில் திடீரென வியர்ப்பது, அடிக்கடி உடல் சூடாவது, பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படுவது, பாலியல் உறவில் ஆர்வமில்லாதது, அன்றாட வேலைகளில் கவனம் சிதறுவது, காரணமின்றி உடல் எடை அதிகரிப்பது அல்லது குறைவது போன்ற அறிகுறிகள் இருப்பவர்களும் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

குழந்தைப்பேறுக்கு தயாராகும் தம்பதியர், மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.


Next Story