செல்லப்பிராணிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை அவசியம்


செல்லப்பிராணிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை அவசியம்
x
தினத்தந்தி 23 April 2023 7:00 AM IST (Updated: 23 April 2023 7:01 AM IST)
t-max-icont-min-icon

செல்லப்பிராணிகளின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்க வேண்டும். மனிதர்களைப் போல அவற்றுக்கும் மகிழ்ச்சி, கவலை என பல்வேறு உணர்ச்சிகள் உண்டாகும். அவை, அவற்றின் ஆரோக்கியத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும்.

செல்லப்பிராணிகள் நமது வாழ்க்கைச் சூழலை மாற்றக்கூடியவை. அவற்றின் எதிர்பார்ப்பு இல்லாத அன்பு, மன இறுக்கத்தைப் போக்கி மகிழ்ச்சியை உண்டாக்கும். செல்லப்பிராணிகளுடன் பழகுபவர்களின் உடல் மற்றும் மனநலம் மேம்படுவதாக பல அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குடும்பத்தில் ஒருவராகவே, பலரது வீட்டில் வலம் வரும் அவற்றை முறையாக பராமரிப்பதும் முக்கியமானது.

வீட்டில் வளர்க்கும் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுக்கு, தேவையான உணவளித்தால் மட்டும் போதும் என்றே பலரும் கருதுகின்றனர். ஆனால் அவற்றுக்கு போதுமான பராமரிப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் செய்வதும் அவசியமானது.

குறிப்பிட்ட கால இடைவெளியில் கால்நடை மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்று செல்லப்பிராணிகளுக்கும் முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம். தற்போது, ஆன்லைன் மூலமாகவே மருத்துவ ஆலோசனை பெறும் வசதியும் உள்ளது.

செல்லப்பிராணிகளிடம் கவனிக்க வேண்டியவை:

செல்லப்பிராணிகளின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்க வேண்டும். மனிதர்களைப் போல அவற்றுக்கும் மகிழ்ச்சி, கவலை என பல்வேறு உணர்ச்சிகள் உண்டாகும். அவை, அவற்றின் ஆரோக்கியத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும். உங்கள் செல்லப்பிராணி வழக்கமான சுறுசுறுப்புடன் செயல்படுகிறதா என்பதை தினமும் கவனியுங்கள். திடீரென்று சோம்பலாகவும், சோர்வுடனும் காணப்பட்டால், அதன் உடல்நலத்தில் ஏதாவது பிரச்சினை இருக்க வாய்ப்புள்ளது.

செல்லப்பிராணிகள் உணவு உட்கொள்ளாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தால், அவற்றை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். அவற்றின் உடலில் புண்கள், முடி உதிர்வு, காயங்கள் உள்ளதா என்பதை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். செல்லப்பிராணிகளின் கண்களில் ஏற்படும் வெண்புள்ளி அல்லது நிறமாற்றம், பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றை அலட்சியம் செய்யாமல் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தகுந்த பரிசோதனைகள் செய்ய வேண்டும்.

சில சமயங்களில் உணவு ஒவ்வாமை, வானிலை அல்லது சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்கள் கூட செல்லப்பிராணிகளின் உடல்நலத்தில் பாதிப்புகளை உண்டாக்கலாம்.

செல்லப்பிராணிகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் தடுப்பூசி போட வேண்டும். மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் அவற்றுக்கு மருந்து களை கொடுக்கக் கூடாது. அடிக்கடி கால்நடை மருத்துவரை மாற்றாமல், எப்போதும் ஒரே மருத்துவரிடம் செல்லப்பிராணிகளை பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான், பிரச்சினையை எளிதில் கண்டறிந்து குணப்படுத்த முடியும். சில அடிப்படை மருத்துவப் பரிசோதனைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில், வீட்டிலேயே மேற்கொள்ள முடியும். இதற்காக, அதிக நேரம் செலவிட வேண்டிய அவசியம் கிடையாது.

செல்லப்பிராணிகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவும், சுகாதாரமான இருப்பிடமும் முக்கியமானவை. அவற்றுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைக்கும் கிண்ணங்கள் சுத்தமானதாக இருக்க வேண்டும். அவ்வப்போது அவற்றை இயற்கை சூழலில் நடைப்பயிற்சிக்கு கூட்டிச் செல்வது நல்லது.


Next Story