இளமையை அதிகரிக்கும் கிளைகோலிக் அமிலம்


இளமையை அதிகரிக்கும் கிளைகோலிக் அமிலம்
x
தினத்தந்தி 6 Aug 2023 7:00 AM IST (Updated: 6 Aug 2023 7:00 AM IST)
t-max-icont-min-icon

கிளைகோலிக் அமிலத்தில், 'கெரடோலிடிக்' என்ற நொதி உள்ளது. இது இறந்த சரும செல்களுக்கு இடையே உள்ள பிணைப்பு இழைகளை கரைக்கும். இதன்மூலம் சருமத் துளைகளை அடைத்துக்கொண்டு இருக்கும் இறந்த செல்கள், நுண்கிருமிகள் எளிதாக வெளியேறும். இதனால் முகப்பருக்கள், தழும்புகள் இல்லாத பொலிவான சருமத்தை பெற முடியும்.

ரும அழகைப் பராமரிப்பதற்கு பல்வேறு அழகு சாதனப் பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றில் சரும நிபுணர்களால் அதிகமாக பரிந்துரைக்கப்படுவது 'கிளைகோலிக் அமிலம்'. பெரும்பாலான சரும பிரச்சினைகளுக்கு, இந்த அமிலம் சிறந்த தீர்வாக இருக்கிறது என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதைப் பற்றிய மேலும் பல தகவல்கள் இதோ...

கிளைகோலிக் அமிலம், கரும்பில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது, நீரில் கரையும் தன்மை கொண்டது. சருமத்தின் செல்களுக்கு இடையில் எளிதாக ஊடுருவக் கூடியது. சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களையும் முழுவதுமாக அகற்றி சருமத்தின் இளமையை அதிகரிக்கக்கூடிய 'கொலாஜென்' உற்பத்தியையும் தூண்டும்.

கிளைகோலிக் அமிலம் பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டது. சருமத்தின் அடுக்குகளில் கறைகள், கருந்திட்டுகள் உருவாகுவதை தடுக்கக்கூடிய 'காமெடோலிடிக்' பண்புகளும் இந்த அமிலத்தில் உள்ளன.

நன்மைகள்:

கிளைகோலிக் அமிலத்தில், 'கெரடோலிடிக்' என்ற நொதி உள்ளது. இது இறந்த சரும செல்களுக்கு இடையே உள்ள பிணைப்பு இழைகளை கரைக்கும். இதன்மூலம் சருமத் துளைகளை அடைத்துக்கொண்டு இருக்கும் இறந்த செல்கள், நுண்கிருமிகள் எளிதாக வெளியேறும். இதனால் முகப்பருக்கள், தழும்புகள் இல்லாத பொலிவான சருமத்தை பெற முடியும்.

கிளைகோலிக் அமிலம் தோலின் வெளிப்புற அடுக்கை மேம்படுத்தும். கொலாஜென் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தின் இளமைத் தோற்றத்தை நீடிக்கச் செய்யும். சருமத்தின் வெளிப்புற அடுக்குகளில் ஏற்படும் புள்ளிகள், கருந்திட்டுகள் ஆகியவற்றை நீக்கும். சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, புதிய செல்கள் உருவாக வழிவகுக்கும்.

காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும்போது, சருமம் எளிதில் வறண்டு போகும். கிளைகோலிக் அமிலம் செல்கள் எளிதாக உறிஞ்சுவதற்கு ஏற்ற மூலக்கூறுகளைக் கொண்டது. எனவே சருமம் இதை விரைவாக உறிஞ்சி ஈரப்பதம் அடையும். நீர் மூலக்கூறுகளை எளிதாக ஈர்க்கும், ஈரப்பதமூட்டியாகவும் கிளைகோலிக் அமிலம் செயல்படும்.

பயன்படுத்தும் முறை:

அதிகமாக பயன்படுத்தப்படும் அழகு பராமரிப்பு பொருட்களான பேஸ் வாஷ், பாடி வாஷ் ஆகியவற்றின் தயாரிப்பில் கிளைகோலிக் அமிலம் சேர்க்கப்படுகிறது. இந்த அமிலத்தை பயன்படுத்த விரும்புபவர்கள், 5 முதல் 8 சதவீதம் கிளைகோலிக் அமிலம் சேர்க்கப்பட்டுள்ள அழகு பராமரிப்பு பொருட்களை வாங்கி உபயோகிக்கலாம். கிளைகோலிக் அமிலத்தை சீரம் (சரும பராமரிப்பு திரவம்) மற்றும் மாய்ஸ்சுரைசராக பயன்படுத்துவது நல்லது.

எண்ணெய் சருமம், சாதாரண மற்றும் காம்பினேஷன் சருமம் கொண்டவர்கள் கிளைகோலிக் அமிலத்தை குறைந்த அளவில் பயன்படுத்தலாம். வறண்ட மற்றும் சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் இந்த அமிலத்தை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் கிளைகோலிக் அமிலத்தை வெயில் நேரங்களில் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாலை நேரங்களில் உபயோகிக்கலாம். இந்த அமிலம் கொண்ட அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தும் முன்பு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.


Next Story