கொழுப்பைக் கரைக்கும் கழுதைப்பால்
கழுதைப் பாலில் உள்ள சத்துக்கள் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைவதையும், கொழுப்பு சேர்வதையும் தடுக்கும். ரத்த அழுத்தத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
கழுதைப் பாலை பயன்படுத்துவது தற்போது புதிதாகத் தெரியலாம். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே மக்கள் அதை உபயோகித்து இருக்கிறார்கள் என்று வரலாறு கூறுகிறது. கழுதைப்பால் மருந்தாகவும், அழகு பராமரிப்புப் பொருளாகவும் பயன்படுகிறது. பேரழகி கிளியோபாட்ரா தன்னுடைய சரும அழகைப் பராமரிப்பதற்காக, தினமும் கழுதைப்பாலில் குளித்ததாக சொல்லப்படுகிறது.
கழுதைப் பாலில் உள்ள வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்டுகள் ஆகியவை சருமத்தில் ஏற்படும் சுருக்கம் மற்றும் வயதான தோற்றத்தைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை. இதில் உள்ள 'வைட்டமின் டி' சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும்.
பசு, எருமை, ஆடு போன்றவற்றை ஒப்பிடும்போது, கழுதைப்பாலில் தாய்ப்பாலுக்கு நிகரான பல சத்துக்கள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது. கழுதைப்பாலில் கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள், புரதம், கொழுப்பு, கால்சியம், ரிபோபிளேவின், வைட்டமின் ஈ, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி6, வைட்டமின் சி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஐரோப்பிய நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் கீல்வாதம், இருமல், அறுவை சிகிச்சை காயங்கள் மற்றும் புண்களை குணப்படுத்துவதற்கு கழுதைப்பாலை பயன்படுத்துகிறார்கள். இதில் லாக்டோபெரின், இம்யூனோகுளோபுலின்கள் மற்றும் லைசோசைம் ஆகிய இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இவை சால்மோனெல்லா, என்டோரோகோகுசி, எஸ்கெரிச்சியாய் மற்றும் லிஸ்டீரியா போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படும்.
கழுதைப் பாலில் உள்ள 'லாக்டோஸ்', எலும்பு வளர்ச்சிக்கும், மற்ற தாதுக்களை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. மேலும் இது எலும்பின் வலிமையையும் அதிகரிக்கச் செய்கிறது.
கழுதைப் பாலில் உள்ள சத்துக்கள் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைவதையும், கொழுப்பு சேர்வதையும் தடுக்கும். ரத்த அழுத்தத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
கழுதைப் பாலில் உள்ள லாக்டோஸ் குடல் நுண்ணுயிர் பெருக்கத்தை ஊக்குவிக்கும். இதில் உள்ள புரதம் எளிதாக செரிமானம் ஆகக் கூடியது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.
கழுதைப் பாலை காய்ச்சி பயன்படுத்துவதே நல்லது. சூடுபடுத்திய பாலை 3 நாட்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம். கழுதைப் பால், பவுடர், சீஸ் போன்ற வடிவங்களிலும் கிடைக்கிறது.