குழந்தைகளுக்கு ஏற்ற தேங்காய் எண்ணெய் தயாரிப்பு


குழந்தைகளுக்கு ஏற்ற தேங்காய் எண்ணெய் தயாரிப்பு
x
தினத்தந்தி 29 Jan 2023 7:00 AM IST (Updated: 29 Jan 2023 7:00 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்காக, ரசாயனங்கள் கலக்காமல் வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்தலாம். அதற்கான குறிப்புகளை பார்ப்போம்.

ந்திய கலாசாரத்தில், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் வழக்கத்தை பலரும் கடைப்பிடித்து வருகிறார்கள். குழந்தை பிறப்பதற்கு சில நாட்கள் முன்னதாகவே, வீட்டில் இருக்கும் பெரியவர்கள் குழந்தை பராமரிப்புக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாரித்து வைப்பார்கள். அதில் முக்கியமானவை மசாஜ் செய்வதற்கான எண்ணெய் மற்றும் குளியல் பொடி.

மசாஜ் செய்வதற்கு பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யை பயன்படுத்துவார்கள். குழந்தைகளின் சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும். எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும்போது சரும வறட்சி நீங்கும். உடல் வளர்ச்சி அதிகரிக்கும். எலும்புகள் வலுவாகும். ரத்த ஓட்டம் சீராகும்.

தேங்காய் எண்ணெய் அடர்த்தி குறைவாக இருப்பதால் சருமத்தில் எளிதாக ஊடுருவும். இது கோடை காலத்தில் சருமத்தை குளிர்விக்கும். பனிக்காலத்தில் சருமத்துக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்கும். பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் அழற்சியை நீக்கும். சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். இதில் உள்ள ஆக்சிஜனேற்ற அழற்சி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் குழந்தைகளுக்கு சரும பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.

குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்காக, ரசாயனங்கள் கலக்காமல் வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்தலாம். அதற்கான குறிப்புகள் இங்கே…

அதிக முற்றல் அல்லது இளசாக இல்லாமல், நடுத்தரமாக இருக்கும் தேங்காய்கள் 2 அல்லது 3 எடுத்துக்கொள்ளவும். அவற்றை துருவி தண்ணீர் சேர்க்காமல் இரண்டு முறை பால் பிழிந்துகொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தில் தேங்காய்ப்பாலை ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்தவும். சிறிது நேரத்தில் பால் சிறு சிறு கட்டிகளாக மாறத் தொடங்கும். அவ்வப்போது அதை அடிப்பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

கடைசியாக பாலில் இருக்கும் தண்ணீர் சத்து முழுமையாக வற்றி, எண்ணெய் மேலே மிதந்து வரும். இப்போது தீயை அணைக்கவும். எண்ணெய் ஆறியதும் வடிகட்டி கண்ணாடி ஜாடியில் ஊற்றி வைக்கவும். இதை அறை வெப்பநிலையில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

வீட்டில் தயாரிக்கும் இந்த எண்ணெய்யை நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம் என்றாலும், குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் புதிதாக தயாரித்து பயன்படுத்துவது நல்லது. குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல், பிரசவித்த தாய்மார்களும் இதைப் பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெய்யை குழந்தைகளுக்கு பயன்படுத்தும் முறை

கோடைக்காலத்தில், பிறந்த குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெய்யை சூடுபடுத்தாமல் அப்படியே பயன்படுத்தலாம். அதேசமயம், குளிர்காலத்தில் மிதமான சூட்டில் உபயோகிப்பதே நல்லது.

முதலில் குழந்தையின் மார்பில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி, கைகளால் மேல்நோக்கி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து தலை, கைகள், கழுத்து, கால்கள் மற்றும் பாதங்களில் எண்ணெய் தடவி மசாஜ் செய்யலாம்.

வட்ட மற்றும் மேல்நோக்கிய இயக்கங்களில் மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.

குழந்தையின் தொப்புள், மூக்கு, கண்கள் மற்றும் காதுகளில் எண்ணெய் ஊற்றுவதைத் தவிர்க்கவும்.


Next Story