பாதங்களுக்கான பராமரிப்பு


பாதங்களுக்கான பராமரிப்பு
x
தினத்தந்தி 24 July 2022 7:00 AM IST (Updated: 24 July 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

குளிக்கும்போது நகங்கள், பாதம் மற்றும் குதிகால் ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தி சுத்தம் செய்ய வேண்டும். நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்கள் மற்றும் தோல்களையும் நீக்க வேண்டும். இதற்கு மென்மையான பிரஷ்களை பயன்படுத்தலாம்.

தினமும் முக அழகை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் பல பெண்கள், வாரத்துக்கு ஒரு முறை கூட பாதங்களின் பராமரிப்புக்கு நேரம் ஒதுக்குவது இல்லை. இவ்வாறு பாதங்களை கவனிக்காமல் இருந்தால், நாளடைவில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்று, சரும வெடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

கைகளைப் போலவே, கால்களிலும் நகங்களை நீளமாக வளர்த்தல் கூடாது. சாக்ஸ் மற்றும் ஷூக்களில் உள்ள அழுக்குகள், கால் நகங்களின் இடுக்குகளில் படிந்து அங்கு கிருமித்தொற்றை ஏற்படுத்தக்கூடும். எனவே தினமும் சோப்பு போட்டு கால்களைக் கழுவ வேண்டும்.

குளிக்கும்போது நகங்கள், பாதம் மற்றும் குதிகால் ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தி சுத்தம் செய்ய வேண்டும். நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்கள் மற்றும் தோல்களையும் நீக்க வேண்டும். இதற்கு மென்மையான பிரஷ்களை பயன்படுத்தலாம்.

தினமும் ஷூ அணிபவர்களின் பாதங்களில் இருந்து வெளியேறும் வியர்வை, ஷூக்களில் படிந்து, அதன்மூலம் கிருமித் தொற்று ஏற்படலாம். இதைத் தவிர்க்க வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஷூக்களை வெயிலில் நன்றாக உலர வைத்து பயன்படுத்துவது நல்லது.

பாதங்கள் ஈரப்பதமாக இருக்கும் போது எளிதில் பூஞ்சைத் தொற்று ஏற்படும். இதனால் அரிப்பு, எரிச்சல், தோல் உரிதல் மற்றும் சில சமயங்களில் வலி மிகுந்த கொப்புளங்களும் ஏற்படலாம். இவற்றைத் தவிர்ப்பதற்கு பாதங்களை உலர்வாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக விரல்களுக்கு இடையே உள்ள பகுதிகளை உலர்வாக வைத்திருப்பது முக்கியம்.

நகங்களை சீராக வெட்டுவதற்கு ஏற்ற நகவெட்டி பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு முறை நகங்களை வெட்டிய பிறகும் அதனை சுத்தம் செய்வது அவசியம். உங்களுக்கென்று தனியாக ஒரு நகவெட்டி வைத்துக்கொள்வது சிறந்தது.

பாதங்களுக்கு சரியான அளவில் காலணிகளைத் தேர்ந்தெடுங்கள். முடிந்தவரை ஹீல்ஸ் போன்ற காலணிகளை அன்றாடம் உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

முகம் மற்றும் கைகளுக்கு மாய்ஸ்சுரைசர் உபயோகிப்பதை போல பாதங்களுக்கும் பயன்படுத்த வேண்டும். வறட்சியான பாதங்களில் வெடிப்பு, தோல் உரிதல் போன்ற பாதிப்புகள் உண்டாகும். எனவே பாதங்களை சுத்தப்படுத்தியதும் கோகோ வெண்ணெய் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி போன்ற மாய்ஸ்சுரைசர்களை பூசலாம்.

மாதத்திற்கு இரண்டு முறை கால்களை 15 முதல் 20 நிமிடங்கள் வரை வெதுவெதுப்பான நீரில் வைக்கவும். இது சருமத்தை மென்மையாக்கும். பின்பு பாதங்களை ஸ்கிரப்பர் அல்லது பியூமிஸ் கல்லைக் கொண்டு லேசாக தேய்த்து இறந்த செல்களை நீக்கவும். பிறகு நன்றாக மசித்த ஒரு வாழைப்பழத்தில், ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு கலந்து பாதம் முழுவதும் மாஸ்க் போல போடவும். 20 நிமிடங்கள் கழித்து மிதமான சூடுள்ள தண்ணீரில் கழுவவும். பின்பு மாய்ஸ்சுரைசர் தடவவும். இதனால் பாதங்கள் மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.


Next Story