உடல் எடையைக் குறைக்க உதவும் பெர்ரி பழங்கள்
பெர்ரி பழங்களில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.
பலவிதமான வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் காணப்படும் பெர்ரி பழங்கள், ஊட்டச்சத்து நிறைந்தவை. இவற்றில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. எனவே உடல் எடைக் குறைப்பில் ஈடுபடுபவர்கள் பெர்ரி வகை பழங்களை தாராளமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம். எந்த வகை பெர்ரி பழத்தில் எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.
ஸ்ட்ராபெர்ரி:
ஸ்ட்ராபெர்ரி பழங்களில் 'வைட்டமின் சி' அதிக அளவில் உள்ளது. இது கொழுப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தால் உண்டாகும் பிரச்சினைகளில் இருந்து இதயத்தைப் பாதுகாக்கும். அதிக அளவு ஆன்டி-ஆக்சிடன்டுகள் கொண்ட ஸ்ட்ராபெர்ரி பழங்கள், குறைந்த கலோரிகள் கொண்டவை. இவற்றில் இருக்கும் நார்ச்சத்து தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும்.
புளூபெர்ரி:
புளூபெர்ரி அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது. இதில் 'வைட்டமின் கே' அதிக அளவில் உள்ளது. இது இதய ஆரோக்கியம், எலும்புகளின் வலிமை, சருமப் பொலிவு ஆகியவற்றை அதிகரிக்கச் செய்யும். ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் கலந்துள்ள அதிக அளவு சர்க்கரையை குறைக்கும். புற்றுநோயைத் தடுக்கும்.
பிளாக்பெர்ரி:
இதில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி-ஆக்சிடன்டுகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. பிளாக்பெர்ரியில் இருக்கும் மாங்கனீசு சத்து மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க வைக்கும். ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை சீராக்கும். செரிமானக் கோளாறுகளை நீக்கி, எடை இழப்புக்கு உதவும்.
ராஸ்பெர்ரி:
ராஸ்பெர்ரி இதய நோய் அபாயத்தைக் குறைக்கும். ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை சீராக்கும். ரத்த சிவப்பணுக்களை அதிகப்படுத்தும். இதில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து எடை இழப்பை ஊக்குவிக்கும்.
கிரான்பெர்ரி:
கிரான்பெர்ரி சிறுநீர்ப் பாதை நோய் தொற்றைக் குறைக்கும். இதன் சாறை தொடர்ந்து குடித்து வந்தால் ரத்த அழுத்தம், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், தமனிகள் விறைப்பு போன்றவற்றைக் குறைக்க முடியும். கிரான்பெர்ரி ரத்தத்தில் கலந்திருக்கும் கெட்ட கொழுப்பையும் குறைக்கும்.
அகாய் பெர்ரி:
இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்டுகள் கீல்வாத நோயை குணப்படுத்தும். அகாய் பெர்ரியில் கலோரிகளும் குறைவு. உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் இதை அதிகமாக சாப்பிடலாம்.