அரோமா பெடிக்யூர்
ஓமம், கிராம்பு, லவங்கப்பட்டை, ஒரிகானோ, லெமன்கிராஸ், புதினா, யுகலிப்டஸ், பெப்பர்மின்ட், டீ ட்ரீ என பலவகையான அரோமா எண்ணெய்கள் உள்ளன. அவை ஆன்டிசெப்டிக், பூஞ்சைக்கொல்லி மற்றும் ஆஸ்ட்ரிஞ்சன்ட் தன்மை கொண்டதாக இருப்பதால் சரும நோய்களுக்கு நிவாரணியாகப் பயன்படுத்தப்படுகிறது.
மழைக்காலங்களில் ஈரப்பதம் அதிகரிப்பதால், பாதம் மற்றும் கால் விரல்களின் இடுக்குகளில் பூஞ்சைத் தொற்று, எரிச்சல், வலி, பாத வெடிப்பு போன்ற பாதிப்புகள் உண்டாகும்.
ஒரு சில பராமரிப்பு முறைகளைப் பின்பற்றினால் முகம் மற்றும் கூந்தல் போல, பாதங்களையும் பளபளப்பாக வைத்திருக்க முடியும்.
இதற்கு 'அரோமா பெடிக்யூர்' முறை சிறந்தது. 'அரோமா' என்றால் 'வாசனை' என்று பொருள். நறுமணம் நிறைந்த மூலிகை எண்ணெய்களைக் கொண்டு பாதங்களை பராமரிக்கும் முறையே 'அரோமா பெடிக்யூர்'.
ஓமம், கிராம்பு, லவங்கப்பட்டை, ஒரிகானோ, லெமன்கிராஸ், புதினா, யுகலிப்டஸ், பெப்பர்மின்ட், டீ ட்ரீ என பலவகையான அரோமா எண்ணெய்கள் உள்ளன. அவை ஆன்டிசெப்டிக், பூஞ்சைக்கொல்லி மற்றும் ஆஸ்ட்ரிஞ்சன்ட் தன்மை கொண்டதாக இருப்பதால் சரும நோய்களுக்கு நிவாரணியாகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த எண்ணெய்களை தேங்காய், ஆலிவ், பாதாம் போன்ற ஏதாவது ஒரு எண்ணெய்யுடன் கலந்துதான் பயன்படுத்த வேண்டும். அரோமா எண்ணெய்களை 2 முதல் 3 துளிகள் வரை மட்டுமே உபயோகிக்கலாம்.
மழை மற்றும் பனிக்காலங்களில் வாரம் 3 முறை 'அரோமா பெடிக்யூர்' செய்து கொள்ளலாம்.
செய்முறை:
முதலில் சோப்பு கொண்டு கால்கள் மற்றும் பாதங்களை சுத்தமாகக் கழுவுங்கள்.
அரிசி களைந்த தண்ணீர் அல்லது சாதாரண தண்ணீரை சூடுபடுத்தி, ஒரு அகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் உங்கள் கால் பொறுக்கும் சூட்டில் இருக்க வேண்டும்.
கல் உப்பு சிறிதளவு, எலுமிச்சைச் சாறு அரை மூடி, ரோஜா பன்னீர் 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் 1 டீஸ்பூன், அரோமா எண்ணெய் 2-3 துளிகள். இவை அனைத்தையும் அந்தத் தண்ணீரில் ஒவ்வொன்றாகக் கலக்கவும். இந்த நீரில் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை உங்கள் பாதங்களை அமிழ்த்தி வைத்திருங்கள். இதன் மூலம் கால்கள், பாதங்கள், குதிகால்களில் உள்ள வலிகள் குறையும். உடலும், மனதும் புத்துணர்வு பெறும்.
பின்னர் ஸ்கிரப்பர் அல்லது பியுமிஸ் ஸ்டோன் கொண்டு பாதங்களை மென்மையாகத் தேய்த்து காலில் படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்றலாம். பாதங்களில் வெடிப்புகள் அதிகமாக இருந்தால் இவ்வாறு செய்யக்கூடாது. பிறகு கால்களை சுத்தமான துணியால் துடையுங்கள்.
அடுத்ததாக, தரமான மாய்ஸ்சுரைசிங் கிரீம் மற்றும் அரோமா எண்ணெய் 1 துளி இவற்றை நன்றாகக் கலந்து கால்களிலும், பாதங்களிலும் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். மாய்ஸ்சுரைசிங் கிரீமுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய்யும் உபயோகிக்கலாம்.